முதல் தொப்பி கிடைக்கப்போகுது.. கருண் நாயர் ஹேப்பி அண்ணாச்சி
பெங்களூர்: இந்திய அணிக்காக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியை சேர்ந்த கருண் நாயர் பெரும் உற்சாகத்தில் உள்ளார்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒன்டே, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், ஆட உள்ள, டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கருண் நாயர்.
கர்நாடகா சார்பில் ரஞ்சி தொடரில் ஆடி சிறப்பாக செயல்பட்ட கருண் நாயர், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 4 கோடிக்கு இவர் ஏலத்தில் வாங்கப்பட்டிருந்தார்.

கர்நாடகாவுக்காக ஆட்டம்
2013ம் ஆண்டு கர்நாடகாவுக்காக முதல்தர கிரிக்கெட்டில் களம் கண்ட நாயர், 2015ம் ஆண்டு ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில், தமிழகத்திற்கு எதிராக 328 ரன்கள் குவித்து அந்த அணி கோப்பையை வெல்ல உதவினார்.

அபார பேட்டிங்
32 முதல்தர கிரிக்கெட்டில் ஆடியுள்ள நாயர் மொத்தம் 2481 ரன்களை குவித்துள்ளார். சராசரி 52.78 ஆகும். இதில் 7 சதங்களும், 8 அரை சதங்களும் உள் அடக்கம்.

அனுபவம்
கடந்த ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைத்தபோதிலும், களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அது ஒரு நல்ல அனுபவம் என்று கூறுகிறார் நாயர்.

கற்க வாய்ப்பு
அணியுடன் சேர்ந்து இருப்பது ஒரு நல்ல அனுபவம். கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பு கிடைத்தது. தேசிய அணியுடன் இருக்கும்போது கிடைக்கும் பயிற்சி மற்றும் வசதிகள் வித்தியாசமானது.

மகிழ்ச்சி, திருப்தியில்லை
நடப்பு ஐபிஎல் தொடரில் எனது செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது, திருப்தியளிக்கவில்லை. நான் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம். துவக்கம் சிறப்பாக இருந்தபோதும், பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தவறிழைத்துவிட்டேன்.

ஆசையில்லை
இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், பெரிதாக ஆசையை மனதில் வளர்த்துக்கொள்ளவில்லை. ஆசைப்பட்டு கிடைக்கவில்லை என்றால், வருத்தம் ஏற்படும் என்பதால் தவிர்த்துவிட்டேன். இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications