For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்களில் பயம்.. குரலில் நடுக்கம்; தலிபான்கள் பிடியில் ஆப்கன் கிரிக்கெட் - நிர்மூலமாகும் எதிர்காலம்

காபூல்: தலிபான்கள் பிடியில் சிக்கியுள்ள ஆப்கன் கிரிக்கெட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என கடந்த ஆண்டு தோஹாவில் தலிபான்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள், தூதரக அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.

இதனால் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைய, நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கைப்பற்றிய தலிபான்கள்

கைப்பற்றிய தலிபான்கள்

தலிபான்களுடனான ஒப்பந்தத்தின்படி இந்த மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தலிபான்களின் கை ஆப்கானிஸ்தானில் ஓங்கியுள்ளது. ஆப்கன், முழுமையாக தலிபான்கள் கைகளில் வந்துவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் நிலை, எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். குறிப்பாக நட்சத்திர வீரர்களான ரஷீத் கான், முகமது நபி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. பிரிட்டனில் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் விளையாடியதால் அங்கு உள்ளனர். ரஷீத் கான், முகமது நபி இருவரும் தங்களின் குடும்பத்தினரைச் சந்திக்க ஆப்கானிஸ்தான் செல்வார்களா அல்லது ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவார்களா என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஐபிஎல் தொடரில் ரஷீத் மற்றும் நபி ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சன் ரைசர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம், "இரண்டு ஆப்கன் வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல்லின் ஒரு பகுதியாக இருப்பார்கள். "தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து நாங்கள் இதுவரை பேசவில்லை, ஆனால் அவர்கள் போட்டியில் விளையாடுவார்கள்" என்று கூறினார்.

வலி, வேதனை

வலி, வேதனை

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத் கான் குடும்பத்தினர் ஆப்கனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ரஷீத் கான் சிறு வயதில் இருந்தே குண்டு சத்தங்களுக்கு இடையே வாழ்க்கையை நடத்தியவர். அதனால் அந்த வலி, வேதனை, பயம் அவருக்கு தெரியும். ஆப்கானிஸ்தானின் அடுத்த சந்ததியும் இந்த நிலைமைக்கு ஆளாகக் கூடாது என்பதே அவரது நோக்கம். இதனால், அவர் ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "உலகத் தலைவர்களே, என் நாடு பெரும் பிரச்னையில் இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தினம் கொல்லப்படுகிறார்கள். வீடுகளும், உடைமைகளும் அழிக்கப்படுகின்றன. ஆயிரமாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. எங்களை இப்படி சிக்கலில் தவிக்கச் செய்யாதீர்கள். ஆப்கன் மக்களைக் கொல்வதையும், ஆப்கானிஸ்தானை அழிப்பதையும் நிறுத்திக்கொள்ளுங்கள். எங்களுக்கு அமைதி தேவை" என்று சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார்.

குடும்பங்களுக்கு உணவு

குடும்பங்களுக்கு உணவு

அதுமட்டுமல்லாமல், தன் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார். கடந்த ரம்ஜானின் போது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரஷீத் கான் அறக்கட்டளை மூலம் 9,461 பவுண்டுகள் crowd funding மூலம் திரட்டப்பட்டது. அதன்மூலம் 5 மாகாணங்களிலுள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் போரினால் ஆப்கானிஸ்தான் பெரும் சிக்கலை சந்தித்து வருவதால் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கியிருக்கிறார். ஆப்கன் கிரிக்கெட் சங்கத்தோடு கைக்கோர்த்து இந்த நிதி திரட்டலை முன்னெடுத்து இருக்கிறார்.

கிரிக்கெட் எதிர்காலம்?

கிரிக்கெட் எதிர்காலம்?

இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், ரஷீத் கான் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து கவலைப்படுவதாகவும், அவரால் தனது குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற்ற முடியவில்லை என்ற உண்மையை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் பீட்டர்சன் கூறுகையில், "நாங்கள் நீண்ட நேரம் இதுகுறித்து உரையாடினோம், குடும்பத்தை பற்றி அவர் கவலைப்படுகிறார்: அவர் தனது குடும்பத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற முடியவில்லை" என்று அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியிருந்தார். இந்த நிலையில், தலிபான்கள் ஆப்கன் கிரிக்கெட் சங்கத்தையும் கைப்பற்றி இருப்பதால், அங்கு கிரிக்கெட்டே மூழ்கும் நிலையில் உள்ளது. ஆப்கன் மக்கள் கொண்டாடிய கிரிக்கெட் நட்சத்திரங்களின் எதிர்காலம், கிரிக்கெட்டை நேசித்து விளையாடத் தொடங்கியிருக்கும் ஆப்கன் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் என அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது.

அமைதி வேண்டும்

அமைதி வேண்டும்

பிபிசி வானொலி நேர்காணலில் பேட்டியளித்த வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக், காபூலில் உள்ள தனது அணி வீரர்கள் கண்களில், குரல்களில், பேச்சில் கூட பயம் இருக்கிறது. தலிபான்கள் (அவர்கள்) எந்த விளையாட்டு வீரரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறியுள்ளனர், ஆனால் அவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது" என்று நவீன் கூறியுள்ளார். சமீபத்தில் ட்வீட் செய்திருந்த முன்னாள் ஆப்கன் கேப்டன் முகமது நபி, "நான் உலகத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்; ஆப்கன் ஒரு சிக்கலுக்குள், குழப்பத்திற்கும் செல்வதை தயவுசெய்து தடுத்துவிடுங்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு தேவை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம்" என்று வேதனையுடன் ட்வீட் செய்திருந்தார்.

சோதனை, வேதனை

சோதனை, வேதனை

கிரிக்கெட் வீரர்களுக்கு தங்கள் மோசமான ஃபார்ம் காரணமாக சோதனைகள் வரலாம், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக சோதனைகள் வரலாம். இப்படி நாடே வேறொரு கும்பல் கைகளில் சிக்கி, தலைவர்கள் தப்பியோடி, கிரிக்கெட் சங்கமே அந்த கும்பல் கைகளில் சிக்கியயிருக்கும் நிலையில், இதனை சோதனை என்பதா? வேதனை என்பதா?

Story first published: Monday, August 23, 2021, 14:40 [IST]
Other articles published on Aug 23, 2021
English summary
Uncertainty among Afghan cricketers Taliban - தலிபான்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+