Under 19 World Cup : தலைக்கனம் பிடித்த வங்கதேச அணி.. சோலியை முடித்த இளம் இந்திய அணி.. முதல் வெற்றி
கேப் டவுன் : அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சில மாதங்கள் முன்பு இந்தியாவை ஆசிய கோப்பையில் வீழ்த்திய தலைக்கனத்தில் இருந்த வங்கதேச வீரர்கள், போட்டியில் சில தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
ஆனால், இறுதியில் இந்திய அணி, வங்கதேச அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கள் திறமையின் மூலம் பதிலடி கொடுத்தது. அத்துடன் குரூப் ஏ பிரிவில் தங்களின் முதல் போட்டியில் வெற்றியுடன் உலகக்கோப்பையை துவங்கி இருக்கிறது இந்திய அணி.

இந்தப் போட்டியில் உதய் சாகரன் கேப்டன்சியில் களமிறங்கிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களும், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் முஷீர் கான் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் மற்றும் நான்காம் வரிசையில் இறங்கிய உதய் சாகரன் இணைந்து அணியை மீட்டனர். அவர்கள் இருவரும் 116 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். அப்போது அவர்களின் விக்கெட்டை எடுக்க முடியாத வங்கதேச வீரர்கள் கேப்டப் உதய் சாகரனை சீண்டினர். ஆசிய கோப்பை வெற்றியின் மிதப்பில் இருந்த வங்கதேச வீரர்களை பின்னர் அம்பயர் தடுத்து அனுப்பினார்.
ஆதர்ஷ் சிங் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து உதய் சாகரன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ப்ரியான்ஷு 23, ஆரவல்லி ஆவனிஷ் 23, சச்சின் தாஸ் 26 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது.
பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் வங்கதேசம் சேஸிங் செய்ய வந்தது. அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் டெஸ்ட் போட்டியை விட மோசமாக பந்துகளை வீணடித்துக் கொண்டிருந்தனர். அதிகபட்சமாக முகமது ஷிபாப் ஜேம்ஸ் 77 பந்துகளில் 54 ரன்களும், ஆரிஃபுல் இஸ்லாம் 71 பந்துகளில் 41 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை.
இந்திய அணியின் பந்துவீச்சால் நிதான ஆட்டம் ஆடிய வங்கதேசம் விக்கெட்களையும் இழந்து 45.5 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. தேவையே இல்லாமல் இந்திய அணியை சீண்டிய வங்கதேசம் 84 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications