கேப் டவுன் : இந்திய அண்டர் 19 அணி கேப்டன் உதய் சாகரன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வங்கதேச அணி வீரர்கள் அவரை சீண்டினர். ஒரு கட்டத்தில் வங்கதேச வீரர்கள் பலரும் ஒன்று கூடி அவரை திட்டினர். உதய் சாகரன் சற்றும் இடம் கொடுக்காமல் அவர்களுடன் நின்று வாக்குவாதம் செய்ததால், அம்பயர் தலையிட வேண்டிய நிலைமை வந்தது.
அண்டர் 19 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அண்டர் 19 அணியும் பங்கேற்று இருக்கிறது. தனது முதல் போட்டியில் இந்திய அணி, வங்கதேச அணியை சந்தித்தது.
சில மாதங்கள் முன்பு நடந்த ஆசிய கோப்பை அண்டர் 19 தொடரில் அரை இறுதியில் இந்திய அணியை, வங்கதேசம் வீழ்த்தி இருந்தது. பின்னர் இறுதிப் போட்டியிலும் வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. அப்போதே இந்திய வீரர்களுக்கும், வங்கதேச வீரர்களுக்கும் மோதல் போக்கு இருந்தது.

அந்த நினைவுகள் இரண்டு அணிகளுக்கும் இருக்கும் என்பதால் உலகக்கோப்பை போட்டியில் உரசல்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு போட்டிக்கு முன்பே இருந்தது. இந்த நிலையில், உலகக்கோப்பை போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் 2 விக்கெட்கள் 31 ரன்கள் சேர்த்த நிலையில் வீழ்ந்தன. அதன் பின் துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் - உதய் சாகரன் இணைந்து அபார ஆட்டம் ஆடினர். இருவரும் அரைசதம் கடந்தனர்.
அவர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது வங்கதேச வீரர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத விரக்தியில் இருந்தனர். அதனால், உதய் சாகரன் குறுக்கே நிற்பதாகக் கூறி ஒரு வங்கதேச பந்துவீச்சாளர் அவரை தள்ள, வாக்குவாதம் துவங்கியது. பின்னர் மேலும் சில வங்கதேச வீரர்கள் சேர்ந்து கொண்டனர். ஆனால், உதய் சாகரன் எதற்கும் தயங்கவில்லை. அவர்களுடன் சரிக்கு சமமாக நின்றார். பின்னர் கைகலப்பாகி விடுமோ என்ற அச்சத்தில் அம்பயர் வங்கதேச வீரர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.
இந்தப் போட்டியில் ஆதர்ஷ் சிங் 76, உதய் சாகரன் 64 ரன்கள் எடுத்தனர். இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்த வங்கதேச அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. 50 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. பின்னர் 6 விக்கெட் இழந்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது. பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்து 167 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியுடன் உலகக்கோப்பையை துவக்கியது.