நீ என்னென்ன சொன்னாலும் கவிதை... விமர்சகர்களைப் பார்த்து கிண்டலடிக்கும் "உலகநாயகன்" கெய்ல்!
மெல்போர்ன்: 12 பந்து.. ஐம்பது ரன்.. அத்தனை விமர்சகர்களின், விமர்சனங்களின் வாயையும் அடைத்து விட்டார் கிறிஸ் கெய்ல். அத்தோடு தன்னைப் பற்றி வெறுப்போடும், கடுப்போடும் பேசி வந்தவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை என்றும் கூறியுள்ளார். அப்படிப்பட்டவர்களுக்கு தான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார் கெய்ல்.
தானே புயல், காத்ரீனா புயல், நிலம் புயல்கள் வரிசையில் கெய்ல் புயலுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. இயற்கைப் புயல்கள் செய்யும் அத்தனை சேதத்தையும் இந்த கெய்ல் புயல் எதிராளிகளுக்கு நிறையவே செய்து விடும்.
இப்படிப்பட்ட புயலின் கோர தாண்டவத்தை ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது பார்த்துள்ளனர். வெறும் 2 ஓவர்களில் 50 ரன்களை விளாசி அதிரடி ஆட்டத்தைக் காட்டினார் கெய்ல்.
கெய்ல் குறித்து சமீபத்தில் பல சர்ச்சைகள் புகார்கள் வெடித்து வெளிக்கிளம்பின. அத்தனையையும் இந்த அதிரடி ஆட்டத்தால் சமன் செய்து வி்ட்டார் கெய்ல்.. கூடவே யுவராஜ் சிங்கின் சாதனையையும்.

ஆஸி.யை விட்டுக் கிளம்பினார்
பிக்பாஷ் தொடரில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருந்த கிறிஸ் கெய்ல் அங்கு தனது ஆட்டங்கள் முடிந்ததைத் தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சர்ச்சைகளின் நாயகன்
சாதனை நாயகன் கெய்ல் சமீபத்தில் சர்ச்சை நாயகன் ஆனார். டிவி பெண் செய்தியாளரிடம் அவர் பேசிய பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து அவருக்கு 10,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

பாய்ந்து கடித்த சேப்பல்
மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல், கெய்லை யாரும் விளையாட அனுமதிக்கக் கூடாது. அவருக்கு சர்வதேச அளவில் தடை போட வேண்டும் என்று தேவையே இல்லாமல் ஓவராகவே குதித்தார்.

சாதனை அரை சதம்
இந்த நிலையில்தான் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடி வந்த கெய்ல், நேற்று நடந்த போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் போட்டு யுவராஜ் சிங்கின் உலக, சாதனையை சமன் செய்தார்.

பயன் இல்லை
ஆனால் அவரது அரை சதமும், உலக சாதனையும் மெல்போர்ன் அணிக்கு பலன் தரவில்லை. அந்த அணி அரை இறுதிக்குத் தகுதி பெறத் தவறியது.

எல்லாருக்கும் நன்றி
இதையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பினார் கெய்ல். தனது ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் நன்றி சொல்லியுள்ளார். விமர்சகர்களையும் விளாசித் தள்ளியுள்ளார் கெய்ல்.

நன்றி ஆஸ்திரேலியா
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரெனகேட்ஸுக்கு நன்றி.. ஆஸ்திரேலியாவுக்கு நன்றி. உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
நினைவிருக்கும் வரை
நான் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடியதாக சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். நான் உலகத்தின் பல்வேறு லீக்குகளில் ஆடுகிறேன். அதில் பிக்பாஷும் ஒன்று.

குனால் சர்மா.. நன்றி!
நன்றி குனால் (கோல்ட்பேட்) சர்மா. நீங்கள் அருமையானவர்.. பியர்ஸ் மோர்கன் உங்களது ஆதரவுக்கு நன்றி. என்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி.
வெறுப்பாளர்களே.. ஸ்பெஷல் நன்றி
என்னை விரும்பியவர்களுக்கும், என்னை வெறுத்தவர்களுக்கும், மீடியாக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மற்றவர்களை விட வெறுப்பாளர்களுக்குத்தான் விசேஷமாக நான் நன்றி கூற வேண்டும்.

முதுகில் குத்திய மேன்மக்கள்
பல முன்னாள் வீரர்கள் நேரில் பார்க்கும்போது நன்றாக சிரித்துப் பேசுவார்கள். ஆனால் பின்னால் வேறு மாதிரி பேசுவார்கள். அவர்களது "ஆதரவு"க்கும் நன்றி.
நாங்கள் ஹீரோக்கள்...
தயவு செய்து நாங்கள் ஹீரோக்கள் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.. நாங்கள் உலக நாயகர்கள் என்று கூறி தனது செய்தியை முடித்துள்ளார் கெய்ல்.


Click it and Unblock the Notifications