யாரும்மா நீங்க? 10 பேரும் ரிட்டயர்டு அவுட்.. அரண்டு போன கிரிக்கெட் உலகம்.. விதிப்படி சாத்தியமா?
பாங்காக்: ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணியைச் சேர்ந்த 10 வீராங்கனைகளும் ஒரே போட்டியில் 'ரிட்டயர்டு அவுட்' ஆனார்கள். அதில் 8 பேர் ஒரு பந்தையும் சந்திக்காமல், ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஆடுகளத்துக்கு வந்தவுடன் தாங்கள் 'ரிட்டயர்டு அவுட்' ஆவதாகச் சொல்லி வெளியேறினார்கள். இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி நடப்பது சாத்தியமா, ஏன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மகளிர் அணி இவ்வாறு செய்தது என்று பார்க்கலாம்.
மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஆசியப் பகுதி தகுதிச்சுற்றுப் போட்டி பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில் 'குரூப் பி' பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஐக்கிய அரபு அமீரக அணியும், கத்தார் மகளிர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் ஈஷா ஓசா மற்றும் தீர்த்தா சதீஷ் அதிரடியாக ஆடினார்கள். ஈஷா 55 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்தார். தீர்த்தா 42 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். 16 ஓவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 192 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது மழை வருவது போல இருந்தது.
இந்தப் போட்டியில் கத்தார் அணி பலவீனமானது என்பதால், எப்படியும் தோல்வியடையும் என்பது அனைவராலும் ஊகிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையால் போட்டி நிறுத்தப்பட்டால், அதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதைத் தடுத்து, தங்களுக்கு இரண்டு புள்ளிகளைப் பெறுவதோடு நெட் ரன் ரேட்டையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டத்தை வகுத்தது ஐக்கிய அரபு அணி. அதன்படி 16வது ஓவரின் முடிவிலேயே துவக்க வீராங்கனைகள் இருவரும் 'ரிட்டயர்டு அவுட்' ஆவதாகச் சொல்லி வெளியேறினார்கள்.
அதன் பிறகு ஒவ்வொரு வீராங்கனையாக ஆடுகளத்துக்கு வந்து, தாங்கள் 'ரிட்டயர்டு அவுட்' ஆவதாக வரிசையாக அம்பயரிடம் சொல்லிவிட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்கள். இவ்வாறாக 10 வீராங்கனைகளும் 'ரிட்டயர்டு அவுட்' ஆனார்கள். ஏனெனில் டெஸ்ட் போட்டி போல டி20 போட்டியில் டிக்ளேர் செய்ய முடியாது (குறிப்பிட்ட ரன் அல்லது குறிப்பிட்ட ஓவர் முடிந்தவுடன்). மழை பெய்வதற்குள் போட்டியை முடிக்க வேண்டும் என்றால், அடித்த ரன்கள் போதும் என்ற நிலையில் அனைவரும் 'ரிட்டயர்டு அவுட்' ஆவது தான் ஒரே வழி.
இது கிரிக்கெட் விதியின் படி சரியான விஷயம் தான், இதில் தவறு ஏதுமில்லை. மேலும் திட்டமிட்டபடியே ஐக்கிய அரபு அணி அடுத்து பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டது. கத்தார் மகளிர் அணி 11.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐக்கிய அரபு அமீரக அணி 163 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஒருவேளை இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களும் முழுமையாக பேட்டிங் செய்திருந்தால், இதைவிட மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications