Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீயெல்லாம் ஒரு ஆணா? எதுக்கு பயப்படுற?” நடுவரை நோக்கி மெட்வேடேவ் ஆவேசம்.. யுஎஸ் ஓபனில் சர்ச்சை

நியூயார்க்கில் நடைபெற்று வரும் 2025 யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில், முன்னாள் சாம்பியனான டேனியல் மெட்வேடேவ் மற்றும் பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் போன்ஸி மோதிய ஆட்டம் பெரும் சர்ச்சையாலும், குழப்பத்தாலும் போர்க்களமாகக் காட்சியளித்தது. போட்டியின் முக்கிய தருணத்தில், அங்கீகரிக்கப்படாத போட்டோகிராபர் ஒருவர் திடீரென கோர்ட்டுக்குள் நுழைந்ததால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, மெட்வேடேவ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார்.

இந்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 7-5 என்ற கணக்கில் வென்றிருந்த பெஞ்சமின் போன்ஸி, மூன்றாவது செட்டிலும் 5-4 என முன்னிலையில் இருந்தார். வெற்றிக்கு ஒரு புள்ளி மட்டுமே தேவை என்ற நிலையில் (மேட்ச் பாயிண்ட்), போன்ஸி தனது இரண்டாவது சர்வீஸை போடத் தயாரானார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக போட்டோகிராபர் ஒருவர் கோர்ட்டின் பரப்பிற்குள் நுழைந்தார்.

US Open 2025 Daniil Mededev s Outburst After On-Court Intrusion

இந்த திடீர் இடையூறால், போட்டி நடுவர் கிரெக் ஆலன்ஸ்வொர்த், டென்னிஸ் விதிகளின்படி, போன்ஸிக்கு மீண்டும் முதல் சர்வீஸ் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த முடிவுதான் மெட்வேடேவின் கோபத்தைக் கிளறியது.

மெட்வேடேவின் கோபமும், ரசிகர்களின் குழப்பமும்:

நடுவரின் முடிவால் தீவிர ஆத்திரமடைந்த மெட்வேடேவ், நடுவரின் இருக்கையை நோக்கிச் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "நீங்கள் ஒரு ஆணா? ஏன் நடுங்குகிறீர்கள்?" என்று கத்தியதோடு, "இவர் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறார், இவருக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. இவருக்கு ஒரு போட்டிக்குத்தான் சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு அல்ல" என்று மைக்குகளுக்குப் பின்னால் நின்று கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மெட்வேடேவின் இந்த ஆக்ரோஷமான எதிர்வினை, லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்களையும் தூண்டிவிட்டது. ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிடவும், விசில் அடிக்கவும் தொடங்கினர். சுமார் ஆறு நிமிடங்களுக்கும் மேலாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. மெட்வேடேவ் ஒருபுறம் ரசிகர்களை மேலும் கூச்சலிடத் தூண்டினார், பின்னர் அவரே அவர்களை அமைதியாக இருக்கும்படியும் சைகை செய்தார். இந்த சம்பவங்களால் மைதானமே குழப்பத்தில் ஆழ்ந்தது.

போட்டியின் திருப்புமுனை:

இந்தக் குழப்பம், வெற்றி பெறும் நிலையில் இருந்த போன்ஸியின் கவனத்தைச் சிதறடித்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, அவர் ஒரு டபுள் ஃபால்ட் செய்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட மெட்வேடேவ், அந்த கேமைக் கைப்பற்றி, ஆட்டத்தில் நீடித்தார். தொடர்ந்து அந்த செட்டை டைபிரேக்கரில் வென்ற மெட்வேடேவ், நான்காவது செட்டை 6-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி, போட்டியை ஐந்தாவது மற்றும் இறுதி செட்டிற்கு எடுத்துச் சென்றார்.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

யுஎஸ் டென்னிஸ் சம்மேளனம் (USTA) வெளியிட்ட அறிக்கையில், அத்துமீறி கோர்ட்டுக்குள் நுழைந்த போட்டோகிராபர், பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டதாகவும், அவரது அங்கீகார அட்டை ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், இந்த பரபரப்பான போட்டியில் பெஞ்சமின் போன்ஸி 6-3, 7-5, 6-7(5), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வேடேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். போட்டி முடிந்த பிறகும் தனது கோபத்தை வெளிப்படுத்திய மெட்வேடேவ், தனது ராக்கெட்டை உடைத்து எறிந்தார்.

Story first published: Monday, August 25, 2025, 12:20 [IST]
Other articles published on Aug 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+