நியூயார்க் : மாற்றம் ஒன்றே தான் மாறாதது என்பது போல் தற்போது கிரிக்கெட் பல உருவங்களை எடுத்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட்,டி20 கிரிக்கெட், 100 பந்துகள் என மாறி வந்த கிரிக்கெட் தற்போது பத்து ஓவர் கொண்ட போட்டிகளாக நடத்தப்படுகிறது.
உலகின் மிகப் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அண்மையில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை அங்கு நடைபெறுகிறது.

கடந்த வாரம் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கூட ஃப்ளோரிடா மாகாணத்தில் மோதின. இந்த நிலையில் யூ எஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் தொடர் என்ற கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த தொடரை டி 10 குளோபல் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்துகிறது. இவர்கள் ஏற்கனவே அபுதாபியிலும் ஜிம்பாப்வேவிலும் இலங்கையிலும் T10 தொடரை நடத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் தொடங்கும் இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
இதில் நட்சத்திர இந்திய வீரர்கள் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். நியூ ஜெர்சி அணியின் கம்பீர், யூசுப் பதான், ஆர்.பி. சிங், ஆல்பி மார்க்கெல், ஜெசி ரைடர் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒன்று மெர்சிவ்வெயில் யூனிட்டி என்ற அணிக்காக கிறிஸ் கெயில், ஆர்.பி. சிங், பார்த்திவ் பட்டேல், கேவினோ பிரைன், கோரி அண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். அட்லாண்டா ஃபயர் என்ற அணிக்காக ராபின் உத்தப்பா, டேவிட் ஹசி, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கலிபோர்னியா நைட்ஸ் என்ற அணியில் சின்ன தல சுரேஷ் ரெய்னா, அரோன் பிஞ்ச், ஜாக் காலிஸ் பீட்டர் சீடில் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றனர். அதேபோன்று நியூயார்க் வாரியர்ஸ் அணியின் சையது அப்ரிடி, மிஸ்பா உல் ஹக், முரளி விஜய், முனாஃப் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். டெக்ஸாஸ் சார்ஜஸ் அணியில் முகமது ஹபீஸ், பிரவீன் குமார் உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்த போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெறும் இந்த போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.இந்த போட்டி மாலை 6.30 மற்றும் இரவு 8.45 மணி மற்றும் இரவு 10:45 மணிக்கு நடைபெறும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒடிடியில் ஜியோ சினிமாவில் நேரலை செய்யப்படுகிறது.