PAK vs USA: எங்க டீமின் தோல்விக்கு காரணமே இவங்க தான்.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளாசல்
டல்லாஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் கத்துகுட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பாகிஸ்தான் அணியின் முன் வரிசை பேட்ஸ்மேன்களும், சுழற் பந்துவீச்சாளர்களும் தான் காரணம் என அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் சரமாரியாக குற்றம் சாட்டினார்.
இந்த போட்டியில் பாபர் அசாம் ஆமை வேகத்தில் ரன் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை விட்டு பிற வீரர்கள் மீது அவர் குற்றம் சுமத்தினார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்கள் ஐந்து ஓவர்களுக்குள் சாய்ந்தது.

பாபர் அசாம் விக்கெட்டை இழக்காத போதும் மிகவும் நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில் அவர் 23 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின்னரே வேகம் எடுத்து ரன் சேர்த்தார். ஆனால், முதல் பத்து ஓவர்களில் அவரது நிதான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.
ஆனால், முன் வரிசை பேட்ஸ்மேன்களான முகமது ரிஸ்வான், ஃபாக்கர் ஜமான் மற்றும் உஸ்மான் கான் தங்கள் விக்கெட்டுகளை பவர் பிளே ஓவர்களில் இழந்ததை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார் பாபர் அசாம். மேலும், அமெரிக்க அணி பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் அகமது விக்கெட்களை வீழ்த்தவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
அது பற்றி பாபர் அசாம் பேசுகையில், "முதல் ஆறு ஓவர்களில் எங்கள் பேட்டிங் சரியாக இல்லை. நாங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்ததால் நாங்கள் நிதானமாக ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் முன் நின்று கூட்டணி அமைத்து ஆட வேண்டும். முதல் ஆறு ஓவர்களில் எங்களது பந்து வீச்சும் சரியாக இல்லை." என்றார் பாபர் அசாம்.
மேலும், "எங்களது சுழற் பந்துவீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்கள் வீழ்த்தவில்லை. அது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது. இது மிகவும் கடினமாக இருந்தாலும் அமெரிக்க அணிக்கு தான் அனைத்து பாராட்டுக்களும் செல்ல வேண்டும். அவர்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டனர். பிட்ச்சில் சிறிது ஈரத்தன்மை இருந்தது. அது இரண்டு விதமான வேகத்தில் இருந்தது. இதையெல்லாம் ஒரு தொழில் முறை கிரிக்கெட் வீரராக நாம் சரியாக கணித்து இருக்க வேண்டும்" என்று கூறினார் பாபர் அசாம்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அமெரிக்க அணியும் 20 ஓவர்களில் 159 ரன்கள் சேர்த்தது. போட்டி சமநிலையை எட்டியதால் அதன் பின் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் அமெரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.


Click it and Unblock the Notifications