சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மூத்த மற்றும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும், கடைசி டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது ஓய்வு அறிவிப்பு குறித்த பேட்டியில், "நான் சுயநலத்துக்காக அணியில் நீடிப்பதாகச் சிலர் விமர்சித்தனர். அது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது." என்று உஸ்மான் கவாஜா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய டெஸ்ட் வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த 39 வயதான உஸ்மான் கவாஜா, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) தனது மனைவி ரேச்சல் மற்றும் இரண்டு மகள்களுடன் வந்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஜா, 43.39 என்ற சராசரியுடன் மொத்தம் 6,206 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும், 28 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 232 ஆகும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த முதல் இஸ்லாமியர் என்ற வரலாற்றுச் சிறப்பும் இவருக்கு உண்டு.
டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 2013 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 40 ஒருநாள் போட்டிகளிலும், 9 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார்.
தனது ஓய்வு முடிவு குறித்துப் பேசிய கவாஜா, "கடந்த சில காலமாவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இதுபற்றிப் பேசினேன். 2027-ல் நடைபெறும் இந்தியச் சுற்றுப்பயணம் வரை நான் விளையாட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், இதுவே விடைபெற சரியான தருணம் என்று நான் உணர்கிறேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்தமான சிட்னி மைதானத்தில், அதுவும் எனது சொந்த முடிவின்படி கண்ணியத்துடன் விடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அடிலெய்ட் போட்டிக்கான தேர்வின் போது ஏற்பட்ட சில சூழல்கள், 'சரி, இது ஓய்வு பெறுவதற்கான நேரம்' என்பதை எனக்கு உணர்த்தின" என்று தெரிவித்தார்.
தான் ஓய்வு பெறாமல் அணியில் நீடித்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் கவாஜா பதிலளித்தார். "நான் சுயநலத்துக்காக அணியில் நீடிப்பதாகச் சிலர் விமர்சித்தனர். அது எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. ஆனால் உண்மையில், இலங்கைத் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அணியின் தேவை கருதியே பயிற்சியாளர் என்னை விளையாடச் சொன்னார். நான் எனக்காக அணியில் நீடிக்கவில்லை" என்று விளக்கமளித்தார்.
கவாஜாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "கடந்த 15 ஆண்டுகளாகக் களத்தில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியே 'உஸ்மான் கவாஜா அறக்கட்டளை' மூலம் சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்கும் மகத்தானது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சிட்னியில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் கடைசிப் போட்டியில் கவாஜா தனது இறுதி ஆட்டத்தை ஆடவுள்ளார். ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகத் தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்யும் அவருக்கு, சக வீரர்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.