Vaibhav sooryavanshi: ஒரே சீசனில் அதிக சிக்சர்கள்.. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, புதிய அத்தியாயம் படைத்தார். ஓர் ஐபிஎல் சீசனில் ஒரு இந்திய பேட்டர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யவன்ஷி, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்ட சூர்யவன்ஷிக்கு மூன்று சிக்ஸர்கள் தேவைப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற இப்போட்டியில், திரிபுரனா விஜய் வீசிய ஐந்தாவது ஓவரின் ஆறாவது பந்தில் தனது மூன்றாவது சிக்ஸரை விளாசி, அபிஷேக் சர்மாவின் 42 சிக்ஸர்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்தார்.

ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிக ரன் குவிப்பு வீரராக திகழும் வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 43 சிக்ஸர்களை அடித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா, 16 போட்டிகளில் 42 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்திருந்தார்.
ஓர் ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்டர் பட்டியலில், சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக, பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார். இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி 39 சிக்ஸர்களை அடித்தார். இவர்களுடன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் அனைத்து சீசன்களிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லுக்கு சொந்தமானது. 2012 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 15 போட்டிகளில் விளையாடிய கெய்ல், 59 சிக்ஸர்களை விளாசி உலக சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரண்டு பேட்டர்கள் மட்டுமே ஒரு சீசனில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளனர். கிறிஸ் கெய்ல் (59, 51 சிக்ஸர்கள்) மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் (52 சிக்ஸர்கள்) கொண்ட இந்த பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு இணைவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஓர் ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை ஜாஸ் பட்லர் கொண்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்.ஆர். அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி, பட்லர் 45 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிப்பதற்கு சூர்யவன்ஷிக்கு இன்னும் குறைந்தபட்சம் 3 சிக்ஸர்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆண்டு அவர் இந்த இலக்கையும் எட்டுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications