15 வயதில் வைபவ் சூர்யவன்ஷி 102 மீட்டர் தூர சிக்சர் விளாசி அபாரம்.. ஜிம்பாப்வே மண்ணில் பட்டாசு
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது இரண்டாவது அரைசதத்தைக் கடந்து அசத்தியுள்ளார். ஹராரேயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இடது கை ஆட்டக்காரரான வைபவ், எதிரணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த ஆட்டத்தின் போது, ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா வீசிய பந்தில் வைபவ் சூர்யவன்ஷி அடித்த 102 மீட்டர் பிரம்மாண்ட சிக்சர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 13-வது ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட சூர்யவன்ஷி, கிரீஸை விட்டு வெளியே வந்து, பந்தின் லெந்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு லாங்-ஆஃப் திசையில் பந்தைப் பறக்கவிட்டார்.

தனிநபர் சாதனையாக தனது முதல் சர்வதேச சதத்தை அடிக்கும் வாய்ப்பை நூலிழப்பில் தவறவிட்ட வைபவ், 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 165.31 ஆக இருந்தது. இந்திய அணியில் வேறு எந்த பேட்டரும் அரைசதம் கடக்காத நிலையில், அவரே அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாளராகத் திகழ்ந்தார்.
இத்தொடருக்கு முன்பாகவே, இதே மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 175 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். தற்போது இந்த டி20 தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், வைபவ் சூர்யவன்ஷி 50.33 சராசரியிலும் 196.10 ஸ்ட்ரைக் ரேட்டிலும் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் 151 ரன்கள் குவித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டியில், வெறும் 19 பந்துகளில் 50 ரன்கள் விளாசி தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவு செய்தார். அதில் 4 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும்.
இங்கிலாந்து தொடரைத் தவிர்த்து, 2026 ஆம் ஆண்டு சூர்யவன்ஷிக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் விளையாடிய அவர், 13 போட்டிகளில் 48.50 சராசரியிலும் 237.30 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 776 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். இந்த அசத்தலான ஆட்டமே அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இங்கிலாந்து தொடரில் எதிர்பார்த்த அளவு விளையாடாத நிலையில், இந்த ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் வைபவ் மிகச்சிறந்த கம்பேக் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
