11,308 கிமீ பயணம் வேஸ்ட்.. பாவம் வைபவ் சூர்யவன்ஷி! சஞ்சு சாம்சன் அதிரடியால் இனி வாய்ப்பே கிடைக்காது
கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். சஞ்சு சாம்சனின் அபாரமான இந்த ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் பெஞ்சில் அமர வேண்டிய சூழல் தொடர்வதாக ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி சஞ்சு சாம்சன் மற்றும் நமன் திர் அதிரடியாக் 19.4 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 67 ரன்களையும், நமன் திர் 15 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 42 ரன்களையும் விளாசி தள்ளினர். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 67 ரன்களை விளாசியதன் மூலமாக ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால் வைபவ் சூர்யவன்ஷியின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் ஏசியன் கேம்ஸ்க்கு பின் வைபவ் சூர்யவன்ஷி களத்தில் இறங்கவே இல்லை. அதற்கு முன்பும் கூட வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கொடுக்க கம்பீர் தயக்கம் காட்டினார். ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜிம்பாப்வே டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வைபவ் சூர்யவன்ஷி, அதன்பின் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக சொதப்பிய போது, அவருக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் சஞ்சு சாம்சன் 4 போட்டிகளில் 2ல் அரைசதம் அடித்து அசத்திவிடுகிறார். இதனால் கன்சிஸ்டன்சி பிரச்சனையை சஞ்சு சாம்சன் சமாளித்துவிடுவதாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 16 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பே கொடுக்காமல் பெஞ்ச் செய்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கு பயணித்து பெஞ்சில் அமர்வதை வைபவ் சூர்யவன்ஷி வாடிக்கையாக செய்து வருகிறார். இதனை பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் உணர்ந்து 2 போட்டிகளிலாவது வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
