Vaibhav sooryavanshi: ஒரே போட்டியில் உடைத்த ஒட்டுமொத்த சாதனைகள் விவரம்.. பாட் கம்மின்ஸ் படை கதறல்
சந்திகார்: ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். அவரது இந்த இன்னிங்ஸ் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 15 வயது வைபவ், 5 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களை விளாசி, ரியான் பராக் தலைமையிலான அணிக்கு அற்புதமான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி பட்டையை கிளப்பினார்.

ஒரு வரலாற்றுச் சதத்தை நூலிழையில் தவறவிட்டாலும், சூர்யவன்ஷி பெவிலியன் திரும்புவதற்கு முன் பல பேட்டிங் சாதனைகளை முறியடித்தார். நாக்-அவுட் சுற்றில் ராஜஸ்தான் அணிக்கு ஒரு கனவு போன்ற தொடக்கத்தை அவர் அளித்தார்.
டி20 தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார். இந்தப் போட்டிக்கு முன் அவருக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே இந்த மைல்கல்லை எட்டினார். ஐபிஎல் 2026 சீசனில் அவர் இதுவரை 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்துள்ளார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த கேப் இல்லாத வீரர்களின் பட்டியலில் வைபவ் இப்போது முதலிடத்தில் உள்ளார். 2023 ஐபிஎல்லில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அடித்த 626 ரன்களை முறியடிக்க அவருக்கு 44 ரன்கள் தேவைப்பட்டன. தற்போது அவர் 15 போட்டிகளில் 680 ரன்களுடன் அசத்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக வெறும் 16 பந்துகளில் அரை சதம் அடித்து வைபவ் மிரள வைத்தார். ஐபிஎல் பிளேஆஃப்/நாக் அவுட் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் அதிவேக அரைசத சாதனையை (16 பந்துகள்) அவர் சமன் செய்தார்.
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் வைபவ் தற்போது முன்னிலை வகிக்கிறார். கிறிஸ் கெயிலின் 2012 ஐபிஎல் சீசனில் அடித்த 59 சிக்ஸர்களை கடக்க அவருக்கு இந்தப் போட்டியில் 7 சிக்ஸர்கள் தேவைப்பட்டன. அவர் 12 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 65 சிக்ஸர்களுடன் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ஆனார்.
ஐபிஎல் 2026ல் வைபவ் அடித்த 65 சிக்ஸர்கள், ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளது. ஒரே டி20 தொடரில் 60 சிக்ஸர்களை எட்டிய முதல் பேட்ஸ்மேன் இவரே.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக வைபவ் அடித்த 12 சிக்ஸர்கள், ஐபிஎல் பிளேஆஃப் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்ற ஷுப்மான் கில்லின் சாதனையை (10 சிக்ஸர்கள், 2023 குவாலிஃபையர் 2) முறியடித்தது.
ஒரே ஐபிஎல் சீசனில் ஒரு இன்னிங்ஸில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை மூன்று முறை அடித்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் சூர்யவன்ஷி பெற்றார். ஒட்டுமொத்தமாக, ஐபிஎல் இன்னிங்ஸ்களில் நான்கு முறை 10+ சிக்ஸர்களை அடித்து கிறிஸ் கெயிலின் சாதனையை அவர் சமன் செய்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பவர்பிளே ஓவர்களில் (முதல் 6 ஓவர்கள்) வைபவ் மொத்தம் 490 ரன்கள் குவித்துள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச பவர்பிளே ரன்கள் இதுவே, டேவிட் வார்னரின் 467 ரன் சாதனையை இது முறியடித்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பவர்பிளேவில் வைபவ் 8 சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஒரு ஐபிஎல் போட்டியில் முதல் ஆறு ஓவர்களில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிக சிக்ஸர்கள் என்ற புதிய சாதனையாக இது அமைந்தது.
நியூ சண்டிகரில் வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்தியமான பேட்டிங், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 243/8 என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எட்ட உதவியது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தோற்கடித்தால், மே 29 அன்று குஜராத் டைட்டன்ஸுடன் குவாலிஃபையர் 2ல் விளையாட RR அணி முன்னேறும்.


Click it and Unblock the Notifications

