வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது தான் ஆகிறது.. தயவு செய்து அவசரப்பட வேண்டாம்.. ஜெயசூர்யா கருத்து
மும்பை: வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக இருந்தாலும், அவரை உடனடியாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்க கூடாது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். மேலும், சூர்யவன்ஷிக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை அவர் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சூர்யவன்ஷியை ஒரு "வித்தியாசமான திறமைசாலி" என்று வர்ணித்த ஜெயசூர்யா, அவர் தன்னை வளர்த்துக் கொள்ள இந்தியா போதிய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் 15 வயதான சூர்யவன்ஷி இடம் பெற்றிருந்தார். ஆனால், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கியதால் சூர்யவன்ஷிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இது குறித்து பேசிய ஜெயசூரியா, "அவர் ஒரு வித்தியாசமான திறமை வாய்ந்த வீரர். அவர் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு இன்னும் நிறைய காலமும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அவருக்கு தகுந்த அவகாசம் கொடுங்கள், அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்" என்றார்.
"வாய்ப்புகள் நிச்சயமாக தேடி வரும். அவர் எந்த வரிசையில் விளையாடுவார் என்று என்னால் சொல்ல முடியாது, அது சூழ்நிலையை பொறுத்தது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது, அதை அவர் சரியாக பயன்படுத்தி கொள்வார். எனவே, நாம் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.
"அணியின் தேர்வு மற்றும் பேட்டிங் வரிசை குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது. ஆனால் அவர் மிகுந்த திறமைசாலி என்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான கடும் போட்டி நிலவுவது குறித்து குறிப்பிட்ட அவர், அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடர்ந்து தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
"ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தனித்தனி திறமைகள் உள்ளன. அவர்கள் பயிற்சியின் போது கடினமாக உழைக்கிறார்கள். இந்தியாவில், எப்போதும் ஒரு வீரரின் இடத்தை நிரப்பி சிறப்பாக விளையாட மற்றொரு வீரர் தயாராகவே இருக்கிறார். இங்கு போட்டி மிக அதிகமாக உள்ளது" என்று ஜெயசூர்யா கூறினார்.
"இந்திய கிரிக்கெட் மிக உயர்ந்த தரத்தைக் கொண்டுள்ளது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகைகளிலும் அவர்கள் விளையாடுகிறார்கள். மூன்று வகையிலும் சிறப்பாக விளையாடுவது எளிதான காரியமல்ல. இந்தியாவில், நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வீரர்களிடம் மிக அதிகமாக உள்ளது. அதனால்தான் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் சார்பாக விளையாட விரும்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications
