வைபவ் சூர்யவன்ஷி, இந்த ஜாம்பவானை ரோல் மாடலாக வைத்து கொள்ள வேண்டும்.. ஹர்பஜன் சிங் அறிவுரை
மும்பை: இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, விராட் கோலியை ரோல் மாடலாக பின்பற்ற வேண்டும் என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகை 15 வயதான வைபவ் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி 19 வயதிற்குட்பட்டோர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வைபவ் சூர்யவன்ஷி, தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதைத் தொடர்ந்து ஐபிஎல் 2026 தொடரில் 237க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார்.

இந்த சிறப்பான ஆட்டத்தால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டு, ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இந்திய அணியின் முன்னணி ரன் குவிக்கும் வீரர்களில் இரண்டாமிடத்தில் இருக்கும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 28,527 ரன்களும் 86 சதங்களும் விளாசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், "சிறிய வயதிலேயே விராட் கோலி தனது ஆற்றலை எவ்வாறு சரியான வழியில் செலுத்தினாரோ, அதேபோல சூர்யவன்ஷியும் கோலியைத் தனது முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
"கோலி, டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கும்ப்ளே போன்ற வீரர்களை அவர் உற்றுநோக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தங்களது முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் மட்டுமே செலுத்தினர். மற்ற விஷயங்களில் கவனம் சிதறவில்லை. எது முக்கியம் என்பதை புரிந்துகொள்வது அவசியம். தனது திறமைக்கு ஏற்ற நிலையை அடைய சூர்யவன்ஷி தனது இலக்குகளில் தெளிவு பெற வேண்டும்" என்றும் ஹர்பஜன் சுட்டிக்காட்டினார்.
வைபவின் திறமை குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "அவர் நம்பமுடியாத திறமை வாய்ந்தவர். தனது திறமைக்கு ஏற்ற சாதனைகளை அவர் செய்யாவிட்டால், அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் என்றுதான் அர்த்தம். டெண்டுல்கரிடம் அவரது சிறு வயதில் இருந்த திறமை வைபவிடமும் உள்ளது. இந்த வயதில் இத்தகைய அதிரடி ஆட்டத்தையும், தெளிவான பார்வையையும் நான் கண்டதில்லை" என்று பாராட்டிப் பேசினார்.
தனது இரண்டாவது சர்வதேசத் தொடரிலேயே, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-0 எனக் கைப்பற்ற வைபவ் முக்கிய காரணமாக இருந்து தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் 15 வயதில், சர்வதேச ஆடவர் டி20 போட்டிகளில் அரைசதம் அடித்த மிக இளைய வீரர் மற்றும் இந்தியாவுக்காக விளையாடிய மிக இளைய வீரர் என்ற சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
துலீப் டிரோபி அரையிறுதியில் கிழக்கு மண்டல அணிக்காக மத்திய மண்டல அணிக்கு எதிராக 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்ததன் மூலம் துலீப் டிரோபியில் அரைசதம் அடித்த மிக இளைய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதுவரை இந்தியாவுக்காக 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் தங்கம் வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.


Click it and Unblock the Notifications


