"வைபவ் தெருவில் போய் கிரிக்கெட் ஆடு, பரீட்சைக்குப் படி".. தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் அறிவுரை
மும்பை: இந்திய அணியில் அறிமுகமாக உள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போதைக்கு சர்வதேச கிரிக்கெட்டில் கவனம் செலுத்தாமல் தனது சிறுவயது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் கலினன் அறிவுறுத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்காக 70 டெஸ்ட் மற்றும் 138 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேரில் கலினன், கிரிக்இன்போ இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் சூர்யவன்ஷி குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அதில், "வைபவ் சூர்யவன்ஷியிடம் நாம் காண்பது வெறும் திறமை மட்டுமல்ல. இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய வணிக ரீதியான மற்றும் சமூக ஊடகங்களின் உலகிற்கு நடுவே 15 வயது சிறுவன் ஒருவன் நிறுத்தப்பட்டுள்ளான். இத்தகைய சூழலை இதற்கு முன் கிரிக்கெட் உலகம் கையாண்டதே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், "சமூக ஊடகங்கள் இன்று ஒரு சிறுவனுக்கும், நூறு கோடி மக்களின் கருத்துகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்துவிட்டன. இந்த வயதில் அவரது ஒவ்வொரு நகர்வும் உற்றுநோக்கப்பட்டு விமர்சிக்கப்படும். எனவே, அவர் தனது வீட்டில் இருந்து பரீட்சைக்குத் தயாராக வேண்டும்; நண்பர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடி தனது சிறுவயதுப் பருவத்தை அனுபவிக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்தபோது, அவரைப் பொறுப்பான நபர்கள் வழிநடத்தினர். ஆனால் இன்று அந்த நிலை இல்லை" என்று கவலை தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்ற பல வீரர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனதைச் சுட்டிக்காட்டிய கலினன், சூர்யவன்ஷி தனது எதிர்காலத்திற்காக சச்சின் டெண்டுல்கரைத் தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சச்சினை விடச் சிறந்த ஒரு வழிகாட்டி அவருக்குக் கிடைக்க மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில் இருக்கும் வைபவ் சூர்யவன்ஷி, அறிமுக வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். இந்தச் சூழலில் டேரில் கலினன் கூறியுள்ள இந்த அறிவுரை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications
