"இஷான் கிஷனை பார்த்து இந்த மாதிரி ஆட கத்துக்கோங்க".. வைபவ் சூர்யவன்ஷிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
சென்னை: 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டல அணிக்கு எதிராக 270 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்த கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனைப் பார்த்து, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறிப்பிட்ட பேட்டிங் திறனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் விவேக் ரஸ்தான் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், இஷான் கிஷன் கேப்டனாகப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 334 பந்துகளில் 30 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 270 ரன்கள் குவித்தார். இதன் மூலம் துலீப் டிராபி வரலாற்றில் இரட்டைச் சதம் அடித்த 3-வது கிழக்கு மண்டல வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், இறுதிப் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் கேப்டன்-விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இஷான் கிஷன் தன்வசமாக்கினார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் கிழக்கு மண்டல அணியின் துவக்க வீரராகக் களம் இறங்கிய 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வைபவ் தனக்கு நல்ல துவக்கம் கிடைத்தும் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறினார்.
இது குறித்து நேரடி வர்ணனையின் போது பேசிய விவேக் ரஸ்தான், "வைபவ் சூர்யவன்ஷி அவர்களே, நீங்கள் இப்போது இஷான் கிஷன் போன்ற வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மைதானத்தில் செட்டில் ஆன பிறகு, எப்படி ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டும் என்பதை நீங்கள் பழக வேண்டும். கடுமையான வெயிலிலும் இவ்வளவு நேரம் மைதானத்தில் நின்று விளையாடிய இஷான் கிஷனின் உடல் தகுதியும், பொறுமையும் பாராட்டுக்குரியது" என்று கூறினார்.
இந்தப் போட்டியில் கிழக்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்சில் 708 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இஷான் கிஷன் மற்றும் குமார் குஷாக்ரா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. குமார் குஷாக்ரா 101 ரன்கள் எடுத்தார். இறுதி நேரத்தில் அனுகுல் ராய் 45 ரன்களும், முகமது ஷமி 28 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.


Click it and Unblock the Notifications

