IPL 2026: ராஜஸ்தானுக்கு தான் கோப்பை.. மற்ற அணிகளுக்கு எச்சிரிக்கை விட்ட 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
டெல்லி: 2026 ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வெல்வதே தனது இலக்கு என இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். 2026 U-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 175 ரன்கள் குவித்து சாதனை படைத்த இவர், இந்திய அணியில் அறிமுகமாக தயாராகி விட்டார்.
ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி U-19 உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 80 பந்துகளில் 15 பவுண்டரிகள், 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் விளாசி சாதனை படைத்தார்.

மும்பையில் நடந்த 2026 BCCI நமன் விருதுகள் விழாவில்,வைபவ் சூர்யவன்ஷி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த பேட்டியில், "இந்திய அணிக்காக உலகக் கோப்பை வென்றது மகிழ்ச்சி. இந்த விருது விழாவில் மீண்டும் என் அணி வீரர்களையும் பயிற்சியாளர்களையும் சந்தித்தது மேலும் இன்பம் தருகிறது," என்றார்.
களத்தில் இறங்கும்போது குறிப்பிட்ட திட்டங்கள் உள்ளதா என்ற கேள்விக்கு, வைபவ், "குறிப்பிட்ட திட்டம் எதுவும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடி, அணிக்கும் போட்டிக்குமான தேவைக்கேற்ப எனது இயல்பான ஆட்டம் மற்றும் பலத்துடன் செயல்படுவேன்," என்று விளக்கினார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளைய வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் இவரை 13 வயதில் ₹1.1 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. 11 வயதிலிருந்தே ராயல்ஸின் ஸ்கவுட்டிங் குழு கண்காணித்து வந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் தன்னை கண்டறிந்த விதம் குறித்து பேசிய வைபவ், "நான் உள்நாட்டுப் போட்டிகளில் அறிமுகமானபோது, ராஜஸ்தான் ராயல்ஸ் எனது உள்நாட்டு மற்றும் U-19 ஆட்டங்களைக் கண்காணித்தது. அவர்களின் ஸ்கவுட்டிங் குழு நீண்டகாலமாக என்னைப் பின்தொடர்ந்தது. சோதனை முகாம் சிறப்பாக நடந்ததால், ராயல்ஸ் அணிக்குச் செல்லலாம் எனத் தோன்றியது. ஐபிஎலில் விளையாடியதால் என் வாழ்க்கையில் நான் நிறைய மேம்பட்டேன்," என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸில் தனது ஆரம்ப நாட்களும், முதல் முகாம் அனுபவமும் பற்றி பேசிய வைபவ், "முதல் ஐபிஎல் முகாம் எந்தஒரு இளம் வீரருக்கும் சுவாரஸ்யமானது; எனக்கும் அப்படித்தான் இருந்தது. ராகுல் டிராவிட் சார் இருந்ததால் நிறைய கற்றுக்கொண்டேன். அணியில் மூத்த வீரர்கள் இருந்தனர், அவர்களிடமிருந்தும் முதல் முகாம் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து நல்ல அனுபவங்களைப் பெற்றேன்," என்று நினைவு கூர்ந்தார்.
2026 ஐபிஎல் சீசனுக்கான தனது இலக்கை வைபவ் சூர்யவன்ஷி தெளிவுபடுத்தினார்: "இந்த ஐபிஎல் சீசனில் அணிக்கு கோப்பையை வெல்வதுதான் இலக்கு. நான் சிறப்பாகச் செயல்பட்டு, ஒட்டுமொத்த அணிக்கும் உதவ வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிக்கு பங்களித்து, உரிமையாளர்களுக்காக கோப்பையை வெல்வதே என் நோக்கம்," என்று உறுதியுடன் கூறினார்.


Click it and Unblock the Notifications