10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 14 வயதான கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி.. விளையாட்டிற்கு பிரேக்
பாட்னா: உலக கிரிக்கெட்டில் புதிய சூறாவளியாக உருவெடுத்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். இந்த சூழலில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதத் தயாராகி வருகிறார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் உள்ள போதார் சர்வதேசப் பள்ளியில் பயிலும் சூர்யவன்ஷி, தேர்வுக்கான நடைமுறைகளை முடித்து ஹால் டிக்கெட்டை பெற்றுள்ளார். 2026 பிப்ரவரி 17 முதல் மார்ச் 11 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இது குறித்துப் பள்ளியின் முதல்வர் நீல் கிஷோர், "எங்கள் பள்ளியில் வைபவ் சூர்யவன்ஷி பொதுத் தேர்வுகளை எழுதுவார். அவர் தேர்வு எழுதும் போது எந்த சிரமத்தையும் சந்திக்க மாட்டார் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.

அண்டர்-19 உலகக் கோப்பையில், வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான முறையில் ஆடி 62 ரன்களுக்கும் அதிகமான சராசரியுடன் 439 ரன்கள் குவித்து தொடரின் இரண்டாவது அதிக ரன் எடுத்த வீரரானார். சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசித்தாலும், கல்விக்கு அவரது பெற்றோர் பெரும் முக்கியத்துவத்தை அளித்து வருகின்றனர்.
அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி, கல்விக்கும் கிரிக்கெட்டுக்கும் இரண்டையும் சரியாக செயய் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த காலக் கட்டத்தில் டி20 உலககோப்பை நடைபெறுகிறது. இதனால், வேறு எந்த சர்வதேச தொடரும் நடைபெறாதது, வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு தான் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் போட்டி கிரிக்கெட்டுக்குத் திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது.
2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தேர்வு செய்யப்பட்ட மிக இளைய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஒரு ஐபிஎல் போட்டியில், 14 வயதான சூர்யவன்ஷி வரலாறு படைத்தார். மிக இளைய டி20 சதமடித்தவராகவும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த முதல் இந்தியராகவும் சாதனை படைத்தார்.
தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது வருகையை அறிவித்த அவர், அந்த சீசனின் நட்சத்திர வீரர்களில் ஒருவரானார். ஏழு இன்னிங்ஸ்களில் 252 ரன்கள் எடுத்து, 36.00 சராசரி, 206.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன், ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்தையும் பதிவு செய்தார். இப்படி கிரிக்கெட் களத்தில் சதம் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி, பொதுத் தேர்வில் எத்தனை சதம் அடிக்கப்போகிறார் என்பதை காண ரசிகர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications