வைபவ் சூர்யவன்ஷி மட்டும் இந்த அணியில் ஆடினால் எதிரணிகள் பயந்து நடுங்குவார்கள்.. ஆரோன் பின்ச் பேச்சு
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் 15 வயது மட்டுமே நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷி, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் தனது பேட்டிங்கால் தெறிக்கவிட்டு வருகிறார். இவரை இந்திய டெஸ்ட் அணியில் களமிறக்கினால் எதிரணிகள் பயத்தில் நடுங்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியுள்ளார்.
ஆரம்ப காலகட்டங்களில் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்களை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற எழுதப்படாத விதி இருந்தது. ஆனால், விரேந்திர சேவாக், டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நுழைந்து அந்த மாயையை முற்றிலும் உடைத்து காட்டினர். அதே பாணியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக விளையாடி வரும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, எதிர்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் மிக உறுதியாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆரோன் பின்ச், "டி20 போட்டிகளில் புதிய பந்தை வைபவ் சூர்யவன்ஷி எப்படி அநாயாசமாக எதிர்கொள்கிறார் என்பதை நாம் அனைவரும் பார்த்து வியந்து வருகிறோம். அவரை இந்திய டெஸ்ட் அணியில் 5வது வரிசையில் களமிறக்கினால், 50 ஓவர்கள் வீசப்பட்ட பழைய பந்தை அவர் எப்படி ஈவு இரக்கமின்றி துவம்சம் செய்வார் என சற்று கற்பனை செய்து பாருங்கள்" என கூறியுள்ளார். மேலும், களத்தில் ரிஷப் பண்ட் எப்படி எவ்வித பயமுமின்றி எதிர்பாராத ஷாட்களை அடித்து எதிரணி பந்துவீச்சாளர்களை மிரள வைப்பாரோ, அதே போன்ற முரட்டுத்தனமான திறமை வைபவ் சூர்யவன்ஷியிடமும் இயல்பாகவே உள்ளது என அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"ககிசோ ரபாடா, ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ் போன்ற உலகின் அதிவேக பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்தாலும், எவ்வித பயமுமின்றி முதல் பந்தில் இருந்தே பவுண்டரி, சிக்சர் என அடித்து ஆடும் அவரது திறமை என்னை மலைக்க வைக்கிறது. ஒரு 15 வயது சிறுவனிடம் இவ்வளவு முதிர்ச்சியான ஆட்டம் இருப்பது நம்ப முடியாத ஒரு விஷயம்" என பின்ச் பாராட்டியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கைல் ஜேமிசன் வீசிய பந்தில் 4 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தாலும், நடப்பு சீசனில் இதுவரை அவர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி 40.40 என்ற சராசரி மற்றும் 237.64 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் 404 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 3வது இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இவரின் இந்த அசுரத்தனமான ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும், அடுத்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணியில் இவருக்கு கண்டிப்பாக அறிமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என பிசிசிஐயிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
