முன்னாள் கேப்டன் ரெக்கார்டை உடைத்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி.. யூத் கிரிக்கெட்டில் புதிய சாதனை
பிரிஸ்பேன்: இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, யூத் (இளைஞர்) ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான யூத் ஒருநாள் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அண்டர் 19 அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் வைத்திருந்த அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது யூத் ஒருநாள் போட்டியில், இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே டக் அவுட் ஆன நிலையில், களமிறங்கிய வைபவ், பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் 68 பந்துகளைச் சந்தித்து 70 ரன்கள் குவித்தார். இந்த இன்னிங்ஸின் போது அவர் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதன் மூலம், யூத் ஒருநாள் போட்டிகளில் அவரது மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

இதற்கு முன்பு, உன்முக்த் சந்த் 21 போட்டிகளில் 38 சிக்ஸர்கள் அடித்ததே யூத் ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரரின் அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை என்ற சாதனையாக இருந்தது. ஆனால், வைபவ் சூர்யவன்ஷி வெறும் 10 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டி, புதிய சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில், இந்திய சீனியர் அணியில் தற்போது ஜொலித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 போட்டிகளில் 30 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
சாதனைகளின் நாயகன் வைபவ் சூர்யவன்ஷி:
14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, சாதனைகள் படைப்பது இது முதல் முறையல்ல. இந்த இளம் வயதிலேயே அண்டர் 19, ரஞ்சி டிராபி, மற்றும் யூத் ஒருநாள் போட்டிகளில் பல வரலாற்றுச் சாதனைகளை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
இளம் ரஞ்சி வீரர்: 2023-24 ரஞ்சி டிராபி தொடரில், மும்பைக்கு எதிராக தனது 12 வயது மற்றும் 284 நாட்களில் அறிமுகமாகி, ரஞ்சி டிராபி வரலாற்றில் விளையாடிய இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
அதிவேக சதம்: யூத் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் வைபவ் தன்வசம் வைத்துள்ளார். வெறும் 52 பந்துகளில் சதம் விளாசி, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் கம்ரான் குலாம் (53 பந்துகள்) படைத்த சாதனையை அவர் முறியடித்தார்.
ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள்: அந்தச் சதமடித்த போட்டியிலேயே, 10 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, ஒரு யூத் ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
இளம் வயதில் சதம்: தனது 13 வயது மற்றும் 188 நாட்களில் அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, 170 ஆண்டுகால போட்டி கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
யூத் டெஸ்டிலும் சாதனை: சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் யூத் டெஸ்ட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து, யூத் அளவில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார். தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தால் சாதனைகளை முறியடித்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications