சச்சின் மாதிரியே விளையாடுறாரு.. சீக்கிரம் இந்திய அணிக்காக விளையாடுவார்.. அணில் கும்ப்ளே பேச்சு
மும்பை: ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விரைவில் விளையாடக் கூடும் vன முன்னாள் இந்திய கேப்டனும், தலைமைக் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். இருப்பினும், 15 வயதான வைபவ் மீது உடனடி எதிர்பார்ப்புகளைச் சுமத்தக் கூடாது, பொறுமையுடன் அணுக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி தனது துணிச்சலான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடி காட்டினார். இர்ஃபான் பதான் உட்படப் பல முன்னாள் வீரர்கள், இவருக்கு இந்திய அணியில் விரைவில் வாய்ப்பளிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்தனர்.

இது குறித்து பேசிய கும்ப்ளே, வைபவின் இந்த எழுச்சியை சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப காலத்துடன் கும்ப்ளே ஒப்பிட்டார். இருவருமே பதின்பருவத்திலேயே திறமையை வெளிப்படுத்தியவர்கள் எனக் குறிப்பிட்டார். எனினும், ஒவ்வொரு வீரரின் வளர்ச்சிப் பாதையும் தனித்துவமானது என்றும், ஒரு இளம் வீரர் மீது உடனடி அழுத்தத்தைக் கொடுப்பது தேவையற்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சூர்யவன்ஷி இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதில் தனக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்று கும்ப்ளே உறுதியாகக் கூறினார். அது இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் அல்லது இன்னும் சில வருடங்கள் கழித்து நடக்கலாம். ஆனால் இந்த இடது கை பேட்ஸ்மேனின் திறமையை மறுக்க முடியாது, தேர்வுக் குழுவினர் அவரை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சச்சின் டெண்டுல்கர் களத்துக்கு வந்தபோது, 14 அல்லது 15 வயதில் ஒவ்வொரு முறையும் சதம் அடித்துக்கொண்டே இருந்தார். வைபவ் இவ்வளவு சிறப்பாகச் செயல்படுவதை நாம் பார்க்கிறோம், அவர் சரியானவற்றைச் செய்கிறார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இந்த நேரத்தில், ஒரு இளம் வீரரைப் பார்த்து, 'நீ இரண்டு மாதங்களில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்’ என்று சொல்வது ஒருவித அழுத்தம்.
அது நடக்கலாம், நடக்காமலும் போகலாம், ஆனால் அவருக்கு அற்புதமான நேரம் இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகுகூட அவர் 25 வயது மட்டுமே உடையவராக இருப்பார். 15 வயதில் இவ்வளவு சிறப்பாகச் செயல்படும் ஒருவருக்கு இதுதான் சிறந்த விஷயம்," என்று கும்ப்ளே வீடியோவில் குறிப்பிட்டார்."நிச்சயமாக அவர் விரைவில் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு காலம் வரும். அவசரப்படுத்த வேண்டியதில்லை, ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பயணம் உண்டு.
விளையாட்டில் இருப்பது ஒரு நல்ல விஷயம் அதுதான். சிலர் 15 வயதில் தொடங்குகிறார்கள், சிலர் 28 வயதில் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்கள் விளையாட்டில் ஒரு பங்கை வகிக்கிறார்கள். வைபவைப் பொறுத்தவரை, அது இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் அல்லது ஒரு சில வருடங்கள் கழித்து இருக்கலாம். ஆனால் அவர் இந்தத் திறனுடன் பேட்டிங் செய்வதை நான் உறுதியாக நம்புகிறேன், அவரைத் தேர்வுக் குழுவினர் நெருக்கமாகக் கண்காணிப்பார்கள்."


Click it and Unblock the Notifications