Vaibhav: “இனி சிக்ஸ் அடித்தால் மட்டும் போதாது”.. ரகசிய பயிற்சி பற்றி உடைத்த வைபவ் சூர்யவன்ஷி
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்து, 776 ரன்களை குவித்து தன்னை டி20 வீரராக அடையாளம் காட்டிய வைபவ் சூர்யவன்ஷி, அடுத்து டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க வேண்டி ரகசியப் பயிற்சி செய்து வருவதாக கூறி இருக்கிறார்.
இறுதிப்போட்டிக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேசிய இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், "இந்த சீசனின் பேட்டிங் விருதுகளில் நீங்கள் ஒன்றை மட்டும் தவறவிட்டுவிட்டா. அது அதிக பவுண்டரிகள் அடித்ததற்கான விருது." என்றார். அதுபற்றி வைபவ்விடம், "இனிமேலாவது பந்தைத் தரையோடு தரையாக அடிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்று கேட்டார் கவாஸ்கர்.

இதற்குப் பதிலளித்த வைபவ், "நிச்சயமாக, எனது அடுத்த போட்டி ஒருநாள் கிரிக்கெட் வடிவம் என்பதால் நான் பந்தைத் தரையோடு அடித்துத்தான் விளையாட வேண்டும். நான் சிவப்பு பந்திலும் (டெஸ்ட் போட்டிக்காக) நிறைய பயிற்சி செய்துள்ளேன். ஆனால் நான் அதைச் செய்வதை இதுவரை யாரும் பார்த்ததில்லை. விரைவில் அனைவரும் அதைப் பார்ப்பார்கள்" என்று தனது ரகசியப் பயிற்சியை பற்றி கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட் லட்சியம்
பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் குறித்து ஹர்பஜன் சிங் கேட்ட கேள்விக்கு வைபவ் பதிலளிக்கையில், "நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க விரும்புவதாகப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது டி20 போட்டி, பயிற்சியாளர்கள் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். என்னால் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் மட்டுமே நான் பந்தை அடிக்கிறேன், அது கட்டாயத்தால் அல்ல. எனது தந்தை எனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் மிக உயரிய வடிவம் என்று கற்றுக்கொடுத்துள்ளார். எனக்கும் டெஸ்ட் விளையாட ஆசை உள்ளது" என்றார்.
ரஞ்சி கோப்பை சவால்
பீகார் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடியது குறித்துப் பேசிய வைபவ், "நான் இதுவரை குறைவான ரன்களே எடுத்துள்ளேன். அதில் எனக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் நான் எனது ஆட்டத்தை மேம்படுத்தத் தொடர்ந்து உழைப்பேன்" என்றார். வைபவ் 8 முதல்தர போட்டிகளில் (ரஞ்சி டிராபி) விளையாடி 12 இன்னிங்ஸ்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் 58 பந்துகளில் வைபவ் சதம் அடித்து அசத்தியிருந்தார். அண்மையில் சச்சின் டெண்டுல்கரும் வைபவ் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்திருந்தார். 15 வயதிலேயே சிக்ஸர் மழையாகப் பொழிந்த வைபவ், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரை பதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
