வைபவ் உலக கிரிக்கெட்டை ஆள்வான்.. ஆனால் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை நிறுத்தமாட்டான்.. ஜிதேஷ் சுவாரஸ்யம்
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இளம் புயலாக உருவெடுத்துள்ள 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2026 ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை தனது 15 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் அவர் குறித்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெறும் 35 பந்துகளில் சதம் விளாசிய வைபவ், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்களிலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இது குறித்துப் பேசிய ஜிதேஷ் சர்மா, "வைபவ் சூர்யவன்ஷி எப்போதுமே 6 ஆவது கியரில் பேட்டிங் செய்யக்கூடியவர். அவரிடம் மிகச் சிறந்த திறமைகள் உள்ளன. உலக கிரிக்கெட்டையே ஆட்டிப்படைக்கும் வல்லமை அவரிடம் உள்ளது. நான் ஒரு 10 கோடி முதலீடு செய்வதாக இருந்தால், அதை வைபவ் மீது தான் தயக்கமின்றி செய்வேன்" என்று புகழ்ந்துள்ளார்.

அதேநேரம், வைபவ்வின் குழந்தைத்தனம் குறித்தும் ஜிதேஷ் சர்மா கலகலப்பாகப் பேசினார். "அவர் களத்தில் தொழில்முறை கிரிக்கெட் வீரராக இருக்கலாம். ஆனால், களத்திற்கு வெளியே அவர் இன்னும் ஒரு சிறுவன் தான். இரவு நேரங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டாம் என்று நான் பலமுறை அறிவுறுத்தியுள்ளேன். ஆனால் அவர் அதைக் கேட்பதில்லை. அவரை அனைவரும் ஒரு முழுமையான தொழில்முறை வீரராக மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் களத்திற்கு வெளியே அப்படி மாறுவார் என எனக்குத் தோன்றவில்லை" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
முன்னதாக இந்தியா ஏ மற்றும் ஆசிய கோப்பை தொடரில் ஜிதேஷ் சர்மாவின் தலைமையின் கீழ் வைபவ் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் ஏபி டி வில்லியர்ஸ், வைபவ்வின் முதிர்ச்சியான ஆட்டத்தைப் பாராட்டினார்.
"ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கிடைத்த பிறகு, அதே உத்வேகத்துடன் தொடர்ந்து ஆடுவது எளிதல்ல. ஆனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் அவர் விளையாடிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. பந்துவீச்சாளர்களிடம் அவர் எந்தவிதமான ஆணவமும் காட்டவில்லை. ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடினாரோ, அதே தனது சொந்த பாணியில் மிகத் தெளிவாக விளையாடினார்" என்று டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications