பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதில் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் ஒரு சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 38 ரன்களையும், அபிகியான் 74 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 87 ரன்களையும் குவித்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய யு19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

கிஷன் குமார் வீசிய முதல் பந்திலேயே அலெக்ஸ் டர்னர் டக் அவுட்டாகி வெளியேற, அந்த ஓவரின் கடைசி பந்திலேயே சைமன் பட்ஜ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன்பின் வந்த கேப்டன் வில் 17 ரன்களிலும், டாம் ஹோகன் 41 ரன்களிலும், ஜான் ஜெம்ஸ் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ஹெனில் படேல் 3 விக்கெட்டுகளையும், கிஷன் குமார் மற்றும் கனிஷ்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய ஏ அணியின் ஸ்கோர் 5 ஓவர்களிலேயே 50 ரன்களை கடந்தது. ஆனால் சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 22 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் உட்பட 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஆயுஷ் மாத்ரே 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விஹான் மல்ஹோத்ரா 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வேதந்த் த்ரிவேதி - அபிகியான் குண்டு இணை இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். சிறப்பாக ஆடிய வேதந்த் 69 பந்துகளில் 61 ரன்களையும், அபிகியான் 74 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 87 ரன்களையும் குவித்தனர்.
இதனால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியா ஏ அணி நிர்ணயித்த 226 ரன்கள் என்ற இலக்கை, இந்திய ஏ அணி 30.3 ஓவர்களிலேயே எட்டி அசத்தியது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.