IPL 2026: இனி வைபவ் சூர்யவன்ஷி அவ்ளோ ஈஸியா ஆட முடியாதுஏன்னா.. ராபின் உத்தப்பா எச்சரிக்கை!
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர், குறைந்த வயதில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர், அண்டர் 19 உலகக்கோப்பையை வென்று தொடர் நாயகன் விருது பெற்ற இளம் வீரர் என வெறும் 14 வயதிலேயே கிரிக்கெட் உலகில் பல வரலாற்று சாதனைகளை படைத்தவர் வைபவ் சூர்யவன்ஷி. இந்நிலையில், ஐபிஎல் 2026 தொடர் நெருங்கி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ராபின் உத்தப்பா, "கடந்த 12 மாதங்களாக வைபவ் சூர்யவன்ஷி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் உற்று கவனித்து வருகிறேன். அவர் அபாரமாக விளையாடுகிறார். ஆனால், அவரது பேட்டிங்கை பார்க்கையில் அவர் தனது அதிர்ஷ்டத்தை நம்பி சற்று விளையாடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அவரது அதிரடி ஆட்டம் மீதான வியப்பு இப்போது விலகிவிட்டது. இந்த சீசன் அவருக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் ஒரு தொடராக அமையும். அவர் நிச்சயமாக ரன்கள் குவிப்பார், ஆனால் கடந்த ஆண்டு விளையாடியதை போல் இந்த ஆண்டு அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்காது" என்று வெளிப்படையாகக் கூறினார் உத்தப்பா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் வைபவ், தனது ஐபிஎல் கேரியரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து மிரட்டினார். பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி பல சாதனைகளை தகர்த்தார். ஐபிஎல் 2025 தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 206.55 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 252 ரன்களை குவித்தார். அந்த சீசனில் 100 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்களில் 200க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த ஒரே வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் 15 வயதை எட்டவுள்ள வைபவ், வரவிருக்கும் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணியின் அனைத்து போட்டிகளிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அணியை வழிநடத்திய சஞ்சு சாம்சன் விடைபெற்ற நிலையில், ரியான் பராக் தலைமையில் ராஜஸ்தான் அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது.
மேலும், நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் அந்த அணியில் இணைந்துள்ளது கூடுதல் பலத்தை அளித்துள்ளது. எதிர்கால நட்சத்திரமான வைபவ் இந்த சீசனில் எப்படி செயல்படுவார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வைபவ் சூர்யவன்ஷி அதிரடி பேட்ஸ்மேன் என்ற அடையாளத்திலேயே இருப்பாரா? அல்லது சூழலுக்கு ஏற்ப ஆடும் பொறுப்பான பேட்ஸ்மேனாக மாறுவாரா? என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications