'முழு வளர்ச்சி அடையாத சிறுவன் வைபவ் சர்வதேச பவுலர்களை அவமானப்படுத்துவதா'.. கிரெக் சாப்பல் ஆவேசம்
சிட்னி: சமீபத்தில் நடந்து முடிந்த 2026 ஐபிஎல் தொடரில் 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஆனால், இது டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே இருக்கும் அதீத சாதகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 64 பவுண்டரிகள் மற்றும் 72 சிக்சர்களை பறக்கவிட்டார். ஒட்டுமொத்தமாக 237.31 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகின் தலைசிறந்த பவுலர்களை அவர் எவ்வித தயக்கமும் இன்றி வெளுத்து வாங்கினார்.

இவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு இந்திய அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அதிரடி ஆட்டத்தை கிரெக் சாப்பல் பாராட்டியுள்ளார். அதேசமயம், தற்போதைய டி20 கிரிக்கெட் விதிகளால் பவுலர்களின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கிரெக் சாப்பல் கூறுகையில், "உடல் ரீதியாக முழுமையான வளர்ச்சி கூட அடையாத ஒரு 15 வயது சிறுவனால், சர்வதேச அரங்கில் உலகின் தலைசிறந்த பவுலர்களை மிக எளிதாக அவமானப்படுத்த முடிகிறது என்றால், அது இந்த விளையாட்டில் உள்ள பெரிய குறைபாட்டையே காட்டுகிறது. தற்போதைய நவீன தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட பேட்கள், மிகச் சிறிய பவுண்டரி எல்லைகள் மற்றும் பவுலர்களுக்கு கொஞ்சமும் கைகொடுக்காத பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமான தட்டையான ஆடுகளங்கள் ஆகியவை கிரிக்கெட்டை பேட்ஸ்மேன்களின் கைகளுக்கு ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டன" என விமர்சித்துள்ளார்.
மேலும், தற்போதைய டி20 போட்டிகள் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான விளையாட்டாக மாறிவிட்டதாக சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார். சவால்கள் இல்லாத விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்காது என்றும், கேப்டன், பவுலர் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான திட்டமிடல் தற்போது காணாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் எடுக்கும் வழக்கமே அழிந்துவிட்டது என்றும் கிரெக் சாப்பல் கூறி இருக்கிறார்.
பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான சமநிலையை மீண்டும் கொண்டு வர சில அதிரடி விதிமுறை மாற்றங்களை சாப்பல் முன்மொழிந்துள்ளார். அதன்படி, ஒரு டி20 இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும் அணி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க அனுமதி அளிக்க வேண்டும். இது அணிகளின் அதிரடி அணுகுமுறையை மாற்றி சிந்திக்க வைக்கும். அனைத்து டி20 ஆடுகளங்களிலும் குறைந்தது 3 மிமீ அளவுக்கு புற்கள் இருக்க வேண்டும். ஆடுகளத்தின் ஒரு பகுதி வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், மறுபகுதி சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக வறண்டு இருக்கும்படி அமைக்கப்பட வேண்டும்.
அதேபோல், எல்பிடபிள்யூ விதியிலும் முக்கிய மாற்றம் கொண்டுவர வேண்டும். பந்து எங்கு பிட்ச் ஆனாலும் அது நேராக சென்று ஸ்டம்பில் பட்டால் பேட்ஸ்மேனுக்கு அவுட் வழங்க வேண்டும். பவுலர்களுக்கு சாதகமான இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வருவதால் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் திறமையாளர்களின் மதிப்பு குறையாது. மாறாக, கடினமான சவால்களை எதிர்கொள்வதன் மூலம் அவர்களின் உண்மையான திறமை மேலும் மெருகேறும் என கிரெக் சாப்பல் வித்தியாசமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications
