செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்த வைபவ் சூர்யவன்ஷி.. ‘ருத்ரதாண்டவத்தை’ கண்டு மிரண்டு போன அஸ்வின்!
சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது அதிரடி நாயகன் வைபவ் சூர்யவன்ஷியின் அசுரத்தனமான ஆட்டத்தைக் கண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் மிரண்டு போய் பாராட்டித் தள்ளி இருக்கிறார். 2026 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் அணி, குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் வெறும் 27 பந்துகளில் 12 இமாலய சிக்ஸர்களுடன் 97 ரன்கள் குவித்த வைபவின் ஆட்டம் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது.
வைபவின் அபாரமான பேட்டிங் குறித்துப் பேசிய அஸ்வின், "இந்தச் சிறுவன் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவன் போலத் தெரிகிறான். இவனது ஷாட்கள் எதுவும் சாதாரணமானதாக இல்லை. குறிப்பாக இவ்வளவு பெரிய நாக்-அவுட் போட்டியில், அழுத்தங்களைச் சமாளித்து இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்துவது அசாதாரணமானது. பந்துவீச்சாளர்கள் மீது தனது கோபத்தை மைதானத்தில் வெளிப்படுத்துவதற்கு முன்பு, அவன் தியானம் செய்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது" என நகைச்சுவையாகவும் வியப்பாகவும் கூறி இருக்கிறார்.

சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி தொடக்கம் முதலே ஹைதராபாத் பந்துவீச்சைச் சிதறடித்து, வெறும் 16 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். பவர்பிளே ஓவர்களில் ராஜஸ்தான் 80 ரன்களை எட்டியது. வைபவ் 3 ரன்களில் சதத்தைத் தவறவிட்டாலும், அவருக்குத் துணையாக துருவ் ஜூரல் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.
244 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக்-அவுட் ஆனார். இஷான் கிஷன் 33 ரன்களும், டிராவிஸ் ஹெட் 17 ரன்களும் எடுத்த நிலையில் ஆர்ச்சரின் வேகத்தில் வெளியேறினர். நிதிஷ் ரெட்டி 38 ரன்கள் எடுத்துப் போராடிய நிலையில், ரவீந்திர ஜடேஜா அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
இறுதியில் ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்ச்சர் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி அடுத்து நடைபெறும் குவாலிபையர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. 15 வயதிலேயே ஜாம்பவான்களை வியக்க வைக்கும் வைபவ், ராஜஸ்தான் அணியின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications