Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 உலககோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி.. வைபவ் சூர்யவன்ஷி 1 ரன்னில் அவுட்

ஹராரே: ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026 தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஒரே ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை தந்தார்.

இப்போட்டியில் இந்திய அணி கேப்டன் ஆயுஷ் மத்ரே டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களைச் சேர்த்தது. 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்தின் செபாஸ்டியன் மார்கன் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

சமீபகாலமாக அபாரமாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த இன்னிங்ஸ் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள அவர், ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில், வெறும் 50 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 96 ரன்களைக் குவித்து அசத்தினார்.

அதற்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று இளையோர் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியாவை 3-0 என வெற்றிபெற வைபவ் வழிநடத்தினார். அந்த தொடரில் 24 பந்துகளில் 68 ரன்களையும் (10 சிக்ஸர்கள்), 74 பந்துகளில் 127 ரன்களையும் விளாசினார்.

வைபவ் விரைவில் வெளியேறிய போதிலும், அபியன் குண்டு 99 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆயுஷ் மத்ரே 40 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். ஆர்.எஸ். அம்ப்ரீஷ் 61 பந்துகளில் 48 ரன்களும், கனிஷ்க் சவுகான் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் குவித்து இந்திய அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ சிறப்பாகச் செயல்பட்டு, தனது 8 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். செபாஸ்டியன் மார்கன், வைபவ் சூர்யவன்ஷி உட்பட இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 296 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து, 34.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, இங்கிலாந்து அணித் தலைவர் தாமஸ் ரியூ 66 பந்துகளில் 71 ரன்களுடனும், காலேப் ஃபால்கோனர் 43 பந்துகளில் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு இந்த பயிற்சிப் போட்டித் தோல்வி சில முக்கியப் பாடங்களை அளித்துள்ளது.

Story first published: Tuesday, January 13, 2026, 6:30 [IST]
Other articles published on Jan 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+