வைபவ் சூர்யவன்ஷி பலம் என்று நினைத்ததே இப்ப பலவீனமா போச்சு.. சொற்ப ரன்களில் அவுட்.. என்ன ஆச்சு?
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஐபிஎல் தொடரில் தனது மிகப்பெரிய பலமாக இருந்த ஷாட் ஒன்றே, சர்வதேச கிரிக்கெட்டில் அவருக்குப் பலவீனமாக மாறியிருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷி 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் அடித்தார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார். வைபவ் 9 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

3வது ஓவரில் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் இங்கரவா வீசிய ஷார்ட் பந்தை, வைபவ் முன்னேறி வந்து 'புல்' செய்ய முயன்றார். ஆனால் பந்து பேட்டின் மேல் பகுதியில் பட்டு காற்றில் உயர எழும்ப, மிட்-ஆன் திசையில் நின்ற பிளெசிங் முசாரபானி அதை எளிதாகக் கேட்ச் பிடித்தார்.
ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் ஷார்ட் பந்துகளை 'புல்' மற்றும் 'ஹுக்' ஷாட்கள் மூலம் எதிர்கொள்வதில் வைபவ் சூர்யவன்ஷி கில்லாடியாக விளங்கினார். ஐபிஎல்லில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்த ஷாட்களை ஆடி அவர் 59 பந்துகளில் 199 ரன்கள் குவித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 337.28 ஆகவும், தவறான ஷாட் விகிதம் வெறும் 20.3 சதவீதமாக மட்டுமே இருந்தது. மேலும், புல் மற்றும் ஹூக் ஷாட்களை ஆடும் போது 3 முறை மட்டுமே ஆட்டமிழந்து இருந்தார்.
ஆனால், சர்வதேச டி20 கிரிக்கெட்டுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. சர்வதேச போட்டிகளில் இதுவரை 'புல்' மற்றும் 'ஹுக்' ஷாட்கள் மூலம் 14 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள வைபவ், ஏற்கனவே 3 முறை இதே ஷாட்டில் ஆட்டமிழந்துள்ளார். இதில் அவரது தவறான ஷாட் விகிதம் 52.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், சர்வதேச பந்துவீச்சாளர்களின் வேகம் மற்றும் பவுன்ஸை எதிர்கொள்வதில் வைபவ் சூர்யவன்ஷி திணறி வருவது தெளிவாகிறது. இந்த பலவீனத்தை உடனடியாகச் சரிசெய்தால் மட்டுமே சர்வதேச அரங்கில் வைபவ்வால் நிலைத்து நிற்க முடியும். இதற்கு பிட்ச்சில் எந்த அளவு பவுன்ஸ் இருக்கிறது, பவுண்டரி எல்லை தூரம் போன்றவற்றை கணக்கிட்டு அவர் ஆட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications

