“சச்சின் உன்னை நீக்க மாட்டேன் என்று சொன்னேன் ஆனால் இன்று வைபவை..”.. ஸ்ரேயாஸ் மீது ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை: இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி 0-6 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதும் ஏன் அதே போன்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ஸ்ரீகாந்த் ஆவேசமாகப் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "5வது டி20 போட்டியில் டாஸ் போடும் போது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசிய விதம் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அணியின் எதிர்கால நலனுக்காகவும், செயல்பாடு சரியில்லாததாலும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியதாகக் கூறினார்.

இந்திய அணியில் வீரர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களை நீக்குவதாக இருந்தால், அதே அளவுகோல் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கும் கூட பொருந்தும். வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்; ஆனால் உங்கள் இருவரின் செயல்பாடு என்ன லட்சணத்தில் இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரீகாந்த்.
சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரை மாற்றி மாற்றி விளையாடும் அணியில் எடுத்தது குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "ஸ்ரேயாஸ் 5வது போட்டிக்கு முன் வைபவை நீக்கி விட்டு சஞ்சு சாம்சனை சேர்ப்பதாக கூறும் போது சிறந்த அணியுடன் விளையாட விரும்புகிறோம் என்றார். சஞ்சு சாம்சன் தான் உங்கள் சிறந்த அணி என்றால் எதற்காக வைபவை அணியில் சேர்க்க வேண்டும், பின் நீக்க வேண்டும். வைபவ் செய்த தவறு என்ன? இளம் வீரர்களை இப்படித்தான் உருவாக்குவீர்களா?
சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் இந்திய அணியில் அறிமுகமான போது, 'உன்னை இந்தத் தொடரில் இருந்து நீக்க மாட்டேன், பயமின்றி விளையாடு' என்று கேப்டனாக அவரிடம் நான் கூறினேன். அதேபோன்ற நம்பிக்கையைத் தான் கம்பீரும், ஸ்ரேயாஸும் இந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு கொடுத்திருக்க வேண்டும். வைபவை அவர்கள் நடத்திய விதம் எனக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார் ஸ்ரீகாந்த்.
இங்கிலாந்து தொடர் முடிந்தாலும், வைபவ் சூர்யவன்ஷி அடுத்து வரவிருக்கும் ஜிம்பாப்வே தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications