வைபவ் சூர்யவன்ஷி அசுர வளர்ச்சிக்கு பின் இருக்கும் பயிற்சி சீக்ரெட்.. 8 மணி நேரம்.. 600 பந்துகள்!
பாட்னா: இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயதில் நுழைந்து சாதனை படைத்துள்ள இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது கடின உழைப்பு மற்றும் பெற்றோரின் தியாகம் குறித்த நெகிழ்ச்சியான தகவல்களை அவரது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 776 ரன்களை (237 ஸ்ட்ரைக் ரேட்) குவித்து அசத்திய வைபவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் மணீஷ் ஓஜா பேசுகையில், "வைபவ் தனது 8 வயதில் பாட்னாவில் உள்ள எனது அகாடமியில் சேர்ந்தார். டென்னிஸ் பந்திலிருந்து லெதர் பந்துக்கு மாறிய 10 வயதில் இருந்தே அவர் தினமும் காலை 7:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை கிட்டத்தட்ட 8 மணி நேரம் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்" என்றார்.

"நாங்கள் பந்துகளை எண்ணுவதில்லை, என்றாலும் அவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 600 பந்துகளை (100 ஓவர்கள்) எதிர்கொள்வார். முதலில் 200 முதல் 300 பந்துகள் வரை நானே த்ரோடவுன் செய்வேன். நான் சோர்வடைந்தால் உதவி பயிற்சியாளர்கள் வீசுவர். அவர்களும் சோர்வடைந்தால் அகாடமி பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவர். இறுதியாக பந்துவீசும் இயந்திரத்தையும் (பவுலிங் மெஷின்) அவர் எதிர்கொள்வார். 6 ஆண்டுகள் தொடர்ந்து இதே பயிற்சியை மேற்கொண்டதால் தான் அவருக்கு இந்த அசாத்திய பேட்டிங் திறன் கிடைத்துள்ளது" என்று ஓஜா விளக்கினார்.
வைபவ்வின் பெற்றோர் சஞ்சீவ் மற்றும் ஆர்த்தி செய்த தியாகங்கள் குறித்து ஓஜா கூறுகையில், "அவர்கள் சமஸ்திபூரிலிருந்து 2.5 மணி நேரம் பயணம் செய்து அதிகாலை 5 மணிக்கே பாட்னா அகாடமிக்கு வந்துவிடுவர். இதற்காக வைபவ்வின் தாய் ஆர்த்தி அதிகாலை 2 மணிக்கே எழுந்து சமைக்கத் தொடங்குவார். வைபவ், அவரது தந்தை மற்றும் டிரைவருக்கு மட்டுமல்லாமல், அகாடமியில் பந்துவீசும் பவுலர்கள் என மொத்தம் 15 பேருக்கு தினமும் மதிய உணவு சமைத்து அனுப்பி வைப்பார். அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது" என்றார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுர வெற்றியைக் கண்டு, தற்போது 5 வயதிலேயே தங்களது குழந்தைகளை அகாடமியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருவதாக மணீஷ் ஓஜா கூறினார்.


Click it and Unblock the Notifications
