67 பந்துகளில் 93 ரன்கள்.. ரஞ்சி டிராபியிலும் வேலையை காட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. ஜஸ்ட் மிஸ்ஸான சாதனை!
பாட்னா: ரஞ்சி டிராபி தொடரில் மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி தவறவிட்டுள்ளார். மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் 67 பந்துகளில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனாலும் அவர் விரைவில் சதம் விளாசுவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் வீரராக உருவாகி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. கடந்த ஐபிஎல் தொடரிலேயே ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி, முதல் பந்திலேயே சிக்ஸ் விளாசினார். அதன்பின் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனையை படைத்தார்.

இதன்பின் இந்திய யு19 அணியின் நிரந்தர தொடக்க வீரராக மாறிப்போனார். ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த போது வைபவ் சூர்யவன்ஷியை பார்க்க ஒரு ரசிகர் கூட்டமே வந்தது. இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் பிராண்ட் வேல்யூ உயர்ந்து கொண்டே செல்கிறது. சச்சின் எப்படி 16 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான போது பலரும் எதிர்பார்த்தார்களோ, அதேபோன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கேற்ப வைபவ் சூர்யவன்ஷியும் ஒவ்வொரு தொடரிலும் தனது அடையாளத்தை பதித்து வருகிறார். அடுத்ததாக வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் விளையாட வைபவ் சூர்யவன்ஷி விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் வைபவ் சூர்யவன்ஷி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தப் போட்டியில் மேகாலயா - பீகார் அணிகள் விளையாடின. இதில் மேகாலயா அணி முதலில் பேட்டிங் ஆடிய போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 408 ரன்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பீகார் அணிக்கு கிஷோர் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ரன்களை குவித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 67 பந்துகளில் 4 சிக்ச், 9 பவுண்டரி உட்பட 93 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் ரஞ்சி டிராபி தொடரில் சதம் விளாசும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி இழந்தார். அதுமட்டுமல்லாமல் ரஞ்சி டிராபி தொடரில் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்கும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி நழுவவிட்டார்.
1988-89 சீசசில் பஞ்சாப் அணிக்காக துருவ் என்ற வீரர் ஆடிய போது 137 ரன்களை விளாசினார். அப்போது அவரின் வயது 14 ஆண்டுகள், 292 நாட்களாக இருந்தது. தற்போது வைபவ் சூர்யவன்ஷியின் வயது 14 ஆண்டுகள் 222 நாட்களாக இருக்கிறது. இதனால் அடுத்தடுத்த ரஞ்சி போட்டிகளில் சதம் விளாசினால், அவரால் புதிய வரலாறு படைக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications