முதல் மேட்ச்சே மோசமான சாதனையை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. எந்த இந்திய வீரரும் செய்யாத ரெக்கார்டு
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் களம் இறங்கிய 15 வயதான இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, அறிமுக போட்டியிலேயே பல்வேறு சாதனைகளைப் படைத்த போதிலும், யாருமே விரும்பாத ஒரு மோசமான சாதனையையும் செய்து அதிர்ச்சியளித்துள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்களில் அறிமுகம் ஆன வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இள வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். ஆனால், பேட்டிங் செய்யும்போது 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஜோஸ் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே 'ஸ்டம்பிங்' முறையில் ஆட்டமிழந்த முதல் இந்திய பேட்டர் என்ற தேவையற்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன் எந்த ஒரு இந்திய வீரரும் அறிமுகப் போட்டியில் இவ்வாறு ஆட்டமிழந்ததில்லை.
தொடக்கத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்-கின் பந்துவீச்சில் சற்றுத் தடுமாறிய வைபவ் சூர்யவன்ஷி, பின்னர் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தனது ஐபிஎல் அணி சக வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை நேர்த்தியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். தொடர்ந்து ஜோஷ் டங்-கின் பந்தையும் மிட்-விக்கெட்டுக்கு மேலே இமாலய சிக்ஸராக மாற்றினார். ஆனால், வில் ஜாக்ஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றபோது பந்தின் வேகம் குறைவை கணிக்கத் தவறி ஸ்டம்பிங் ஆனார். அது ஒரு தேவையற்ற ஷாட் தான்.
அறிமுகப் போட்டியில் இந்த மோசமான சாதனையைப் படைத்திருந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷி குறித்து அணி நிர்வாகம் பொறுமை காக்கும் என எதிர்பார்க்கலாம். வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அதே பாணியில் தான் ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து அசத்தினார். எனவே, இதுபோன்ற ஆட்டமிழப்புகள் இயல்பானவை என்றும், அவருக்குத் தொடர்ந்து 4 அல்லது 5 போட்டிகளில் வாய்ப்பளித்து அவரது திறமையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
