Vaibhav Suryavanshi: “என் லட்சியமே இதுதான்”.. மொபைலில் குறித்து டார்கெட் அடித்த வைபவ் சூர்யவன்ஷி
அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி மற்றும் மதிப்புமிக்க வீரர் (MVP) விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, தனது உண்மையான லட்சியம் என்ன என்பது பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பல்வேறு உலக சாதனைகளை முறியடித்த போதிலும், வைபவ்வின் கவனம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட் மீதே உள்ளது.
இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி, எனது நாட்டிற்கும், எனது குடும்பத்திற்கும், எனது அணிக்கும் பல சாதனைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம். அது உள்ளூர் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, ஐபிஎல் அல்லது இந்திய அணியாக இருந்தாலும் சரி, நான் எப்போதும் எனது ஆட்டத்தில் கவனம் செலுத்தி அணிக்கு பங்களிக்கவே முயற்சிப்பேன்" என்றார்.

மொபைல் போனில் குறிக்கப்பட்ட இலக்கு
இந்த சீசனில் அவர் விளையாடிய விதம் குறித்துப் பேசிய வைபவ், ஒரு சுவாரஸ்யமான ரகசியத்தை வெளிப்படுத்தினார். "இந்த ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பே, எனது மொபைல் போனில் 700 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு எழுதி வைத்திருந்தேன். அது இன்னும் எனது போனில் உள்ளது. ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும், நான் விளையாடிய ரன்களை அந்த அணிக்கு எதிராக எழுதி வைத்து கண்காணித்து வந்தேன். எனது தனிப்பட்ட இலக்கை நான் எட்டிவிட்டேன். ஆனால், ஒரு அணியாக எங்களால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமே" என்று கூறினார்.
ஆரஞ்சு தொப்பி கனவு
ஆரஞ்சு தொப்பியை வென்றது குறித்து அவர் கூறுகையில், "முன்பெல்லாம் டிவியில் போட்டிகளைப் பார்க்கும்போது பெரிய பெரிய வீரர்கள் ஆரஞ்சு தொப்பியை அணிந்திருப்பதைப் பார்த்துள்ளேன். அப்போது, அந்தத் தொப்பியை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், தற்போது கடவுளின் அருளால் அது எனது தலையில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று நெகிழ்ந்தார்.
இந்த சீசனில் 16 இன்னிங்ஸ்களில் விளையாடிய வைபவ், 48.5 சராசரியுடனும் 237.3 என்ற அசுர வேக ஸ்டிரைக் ரேட்டுடனும் 776 ரன்கள் குவித்தார். இதில் 1 சதமும், 5 அரைசதங்களும் அடங்கும். இதன் மூலம், வெறும் 15 ஆண்டுகள் மற்றும் 65 நாட்கள் வயதிலேயே ஆரஞ்சு தொப்பியை வென்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
