IND vs PAK: வைபவ் சூர்யவன்ஷி சென்ற போது பாகிஸ்தான் ரசிகர்கள் கூச்சலிட்டு அவமானம்.. நடந்தது என்ன?
துபாய்: ஆசியக் கோப்பை அண்டர்-19 இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. அந்தப் போட்டி முடிந்த பிறகு மைதானத்திற்கு வெளியே 14 வயது இந்திய வீரரான வைபவ் சூர்யவன்ஷியை பாகிஸ்தான் ரசிகர்கள் நடத்திய விதம் இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தோல்வியிலும் சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி காட்டிய முதிர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது.
துபாயில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா 191 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. கோப்பையை இழந்த சோகத்தில் இந்திய வீரர்கள் இருந்த நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் எல்லை மீறிய சம்பவம் நடந்துள்ளது.

கூச்சலிட்ட பாகிஸ்தான் ரசிகர்கள்:
போட்டி முடிந்து இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி மைதானத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், அவரைச் சூழ்ந்து கொண்டு கிண்டல் செய்யும் தொனியில் "பூ.." எனக் கூச்சலிட்டு கத்தியுள்ளனர். 14 வயதே ஆன ஒரு சிறுவனை, வயது முதிர்ந்த ரசிகர்கள் இப்படி அவமானப்படுத்தியது பார்ப்பவர்களையே முகம் சுளிக்க வைத்தது.
சாதாரணமாக இது போன்ற நேரங்களில் இளம் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு ஏதாவது செய்வார்கள் அல்லது சோர்ந்து போவார்கள். ஆனால், வைபவ் சூர்யவன்ஷி செய்ததோ வேறு. தன்னைச் சுற்றி ரசிகர்கள் கத்திக்கொண்டிருந்தாலும், அவர் எதற்கும் ரியாக்ட் செய்யவில்லை.
தலையைத் திருப்பிக் கூட பார்க்காமல், "நீங்க கத்துறதெல்லாம் என் காதுல கூட விழல" என்பது போல மிகவும் கூலாக நடந்து சென்றார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. "தோல்வியிலும் என்ன ஒரு கம்பீரம்" என இந்திய ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
காரணம் என்ன?
போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி அவுட் ஆன போது, அவருக்கும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அலி ரசாவிற்கும் இடையே ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. வைபவ் பெவிலியன் திரும்பும் போது தனது காலில் உள்ள ஷூவைச் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார் என்ற சர்ச்சையும் எழுந்தது.
இந்தத் தொடரில் இந்தியா கோப்பையை இழந்தாலும், வைபவ் சூர்யவன்ஷி இறுதிப் போட்டி தவிர மற்ற போட்டிகளில் பேட்டிங்கில் ஜொலித்தார். அமீரக அணிக்கு எதிராக 171 ரன்கள் விளாசியது, மொத்தம் 5 இன்னிங்ஸ்களில் 182 ஸ்ட்ரைக் ரேட்டில் 261 ரன்கள் குவித்தது என பல சாதனைகளை செய்தார்.


Click it and Unblock the Notifications