இதான் சார் என் பிளான்.. டிராவிட்-இடம் தைரியமாக சொன்ன வைபவ் சூர்யவன்ஷி.. வியந்து போன சாம்சன்
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய தைரியம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பிசிசிஐ விருதுகள் விழாவில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.
1.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் களமிறங்கிய முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசி அனைவரையும் மிரள வைத்தார். அந்த சிக்ஸர் எப்படி சாத்தியமானது என்பது குறித்து சஞ்சு சாம்சன் மனம் திறந்துள்ளார்.

சஞ்சு சாம்சன் பேசுகையில், அறிமுகப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வைபவ்வை அறைக்கு அழைத்தார். அவர் மிகவும் சிறிய பையன் என்பதால் ஆலோசனைகள் வழங்கலாம் என்று டிராவிட் நினைத்தார். டிராவிட் அவரிடம் நாளை உனது கேம் பிளான் என்ன என்று கேட்டார். அதற்கு வைபவ், "ஸ்பெஷலாக ஒன்றும் இல்லை சார், முதல் பந்தே எனது ஏரியாவுக்கு வந்தால் அதை அப்படியே தூக்கி அடித்து விடுவேன்" என்று சாதாரணமாக கூறினார். அவர் சொன்னபடியே முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசினார். அவர் தனக்கான வீடியோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சாம்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி சமீபத்தில் ஹராரேவில் நடந்த 2026 அண்டர் 19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 101 ரன்கள் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதே தனது மிகப்பெரிய லட்சியம் என வைபவ் சூர்யவன்ஷி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications