இந்திய டி20 அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்.. IRE, ENG தொடரில் வாய்ப்பு என தகவல்
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியில், 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய பிசிசிஐ தேர்வுக்குழுவினர் ஜூன் 6 சனிக்கிழமை அன்று மும்பையில் கூடுகின்றனர். இதில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டப்ளினில் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 1 முதல் 11 வரையும் நடைபெற உள்ளன.

ஐபிஎல் 2026-ல் உலக சாதனை
பீகாரைச் சேர்ந்த 15 வயது இடதுகை பேட்ஸ்மேனான வைபவ், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்றார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக களம் இறங்கி 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். 237.30 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவர், இந்த சீசனில் 72 சிக்சர்களை பறக்கவிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இதுவாகும்.
எதிர்காலத் திட்டம்
அவரது இந்த அசாத்திய ஆட்டத்திறனை சச்சின் டெண்டுல்கர், பேட் கம்மின்ஸ் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக ஆடும் மிக இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைக்க உள்ளார். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் அதே ஆண்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை மனதில் கொண்டு தேர்வுக்குழுவினர் இந்த முடிவை எடுக்க உள்ளதாக எஸ்பிஎன் கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ் நீக்கம்?
மறுபுறம், 2026 டி20 உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அவரது மோசமான ஆட்டத்திறன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. கடந்த 18 மாதங்களாக அவர் ரன் குவிக்க திணறி வருவதால், அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு இந்திய டி20 அணியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
