வைபவ் சூர்யவன்ஷி: வேண்டுமென்றே பெரிய பவுலர்களை குறிவைத்து தாக்குகிறார்.. பேஸ்பால் மாதிரி இது வைபால்!
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் அதிரடியாக 78 ரன்கள் குவித்து அசத்தினார். இவர் அடித்த மின்னல் வேக அரை சதத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர். முக்கியமாக, 15 பந்துகளில் அரை சதம் அடித்து, 2 முறை இந்த சாதனையை நிகழ்த்திய இளம் வீரர் என்ற பெருமைய பெற்றார்.
கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயித்த 201 ரன்கள் என்ற சவாலான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் துரத்தியது. சூர்யவன்ஷி 15 பந்தில் தனது அரை சதத்தை, போட்டியின் ஐந்தாவது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்குத் தூக்கி அடித்து எட்டினார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பெற வைத்தார்.

சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்தைக் கண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாகப் பாராட்டினார். "இது நம்பமுடியாதது! இது வைபால் (Vaiball) சூர்யவன்ஷி. இந்த வீரருடன் இணைந்து பயணிப்போம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உற்சாகமாகப் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பதிவில், "சூர்யவன்ஷி வேண்டுமென்றே பெரிய பந்துவீச்சாளர்களை குறிவைத்துத் தாக்குகிறாரா? அப்படித்தான் நான் நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். மார்ச் 30 அன்று சூர்யவன்ஷி மற்றொரு அரை சதம் அடித்தபோது, "சிறுவன் தயாராக இருக்கிறான்" என்று தான் வெளியிட்ட ட்வீட்டுக்கு, முகமது கைஃப் பதில் அளித்திருந்தார்.
இந்தச் சாதனையை இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் மட்டுமே நிகழ்த்தியுள்ளார். அவர் ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இரண்டு முறை 15 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரை சதம் (13 பந்துகள்) என்ற சாதனை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் வசம் உள்ளது.
அவர் மே 11, 2023 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் இந்தச் சாதனையைப் படைத்தார். வைபவ் சூர்யவன்ஷியும் துருவ் ஜுரேலும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். சிறப்பாக விளையாடி வந்த வைபவ், க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications