சென்னை: ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026 தொடரில் தற்போது விளையாடி வரும் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தி வருகிறார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 311 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா துரத்திச் சென்றது. இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, தனது மின்னல் வேகமான அதிரடி ஆட்டம் மூலம் அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். வெறும் 33 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து, 206.06 ஸ்டிரைக் ரேட்டில் ஒரு அசத்தலான அரை சதம் அடித்தார்.

இந்த நிலையில் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய ஸ்ரீகாந்த், அவரை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "வைபவ் ஏற்படுத்திய தாக்கமும், அவர் கொடுத்த உத்வேகமும் அபாரமானது. இந்த பையனை உடனடியாக சீனியர் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இதுதான் எனக்குப் பிடித்த ஒன்று. இந்த ஐபிஎல் தொடருக்காகக் காத்திருப்போம், அவர் விரைவாகவே சீனியர் அணிக்கு வருவார் என்று நினைக்கிறேன்," என்றார்.
"பந்துவீச்சாளர்கள் அவருக்கு எங்கு பந்து வீசுவது என்று அஞ்சுகிறார்கள். சேவாக் செய்ததைப் போல, ஒரு மட்டைவீச்சாளர் உருவாக்கும் தாக்கம், மறுமுனையில் உள்ள வீரர்களுக்கு மேலும் எளிதாக்குகிறது," என்று சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பாராட்டினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் 14 வயது இளம் வீரரான சூர்யவன்ஷி, இந்தியாவின் பயணத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறார். இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி, மூன்று அரை சதங்களுடன் 44.00 சராசரியிலும், 147.48 ஸ்டிரைக் ரேட்டிலும் 264 ரன்கள் குவித்துள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் இருந்தே வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்தியமான ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஏழு போட்டிகளில் 36.00 சராசரியிலும், 206.55 ஸ்டிரைக் ரேட்டிலும் 252 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதே ஃபார்மை 2025 ஆம் ஆண்டு இளம் வீரர்களுக்கான ஒருநாள் போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்தார். அந்த ஆண்டில் 12 யூத் ODI போட்டிகளில் விளையாடி, இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்களுடன் 57.50 சராசரியிலும், 160.09 ஸ்டிரைக் ரேட்டிலும் 690 ரன்கள் குவித்தார். இந்த 2026 ஆம் ஆண்டும் அவருக்குத் தனித்துவமாகவே அமைந்தது. இடது கை அதிரடி வீரரான சூர்யவன்ஷி, இதுவரை 10 யூத் ODI போட்டிகளில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 52.22 சராசரியிலும், 162.62 ஸ்டிரைக் ரேட்டிலும் 470 ரன்களைக் குவித்துள்ளார்.