"உடனே பிரையன் லாராவிடம் பேசு".. 14 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு அம்பத்தி ராயுடு அறிவுரை
மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் பெரும் வியப்பை ஏற்படுத்திய 14 வயது இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார்.
வைபவின் பேட்டிங் நுட்பம், மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாராவைப் போலவே இருப்பதால், அவரிடம் பேசி ஆலோசனைகளைப் பெறுமாறு ராயுடு அறிவுறுத்தியுள்ளார். அதன் மூலம் அவரது பேட்டிங் பிரச்சனை ஒன்றை சரி செய்து கொள்ளலாம் என அவர் கூறி உள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 14 வயது இடது கை பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இவர், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது மூன்றாவது போட்டியிலேயே 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த இளம் வீரர் மற்றும் இந்திய வீரர்களில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த இளம் திறமையாளரின் அபாரமான பேட்டிங் குறித்து சுபங்கர் மிஸ்ரா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அம்பத்தி ராயுடு, வைபவின் பேட் சுழலும் வேகத்தைப் வெகுவாகப் பாராட்டினார். "அவரது பேட் வேகம் அபாரமானது. பந்தை அவர் அடிக்கும் அந்த 'விப்' (whip) ஷாட்டை யாரும் மாற்றிவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அவர் இன்னும் மெருகேற வேண்டும். பிரையன் லாரா போன்ற ஒருவரிடம் சென்று பேச வேண்டும்," என்று ராயுடு கூறினார்.
மேலும், "லாராவும் கிட்டத்தட்ட இதே போன்ற 'பேட் லிஃப்ட்' (bat lift) கொண்டவர். எனவே, டிஃபென்ஸ் செய்யும் போதும், மெதுவாக விளையாடும் போதும் பேட்டின் வேகத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதை அவரிடம் இருந்து வைபவ் கற்றுக்கொள்ளலாம். அதை அவர் கற்றுக்கொண்டால், அவர் ஒரு அசாதாரணமான பேட்ஸ்மேனாக உருவெடுப்பார்" என்று அம்பத்தி ராயுடு விளக்கினார்.
இளம் வயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்றுள்ள வைபவிற்கு, ராயுடு சில அறிவுரைகளையும் வழங்கினார். "அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், அது யாரிடமும் அதிகமாக ஆலோசனைகளைக் கேட்கக் கூடாது என்பதுதான். மற்றவர்கள் சொல்வதைக் கேட்காமல், உனது திறமையை மட்டும் நம்பு. பயிற்சியாளர்களுக்கும் இது பொருந்தும், அவருக்கு அதிகமாக அறிவுரைகளைத் திணிக்காதீர்கள். அவரை இயல்பாக விடுங்கள்." என்று அம்பத்தி ராயுடு கேட்டுக்கொண்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில் வைபவ்சூர்யவன்ஷி இருப்பது, அவருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் ராயுடு குறிப்பிட்டார். டிராவிட் போன்ற ஒரு சிறந்த வீரரின் கீழ், வைபவின் திறமை நிச்சயம் பாதுகாக்கப்பட்டு, சரியாக வழிநடத்தப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications