வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த மொயீன் அலி.. “தம்பி ஐபிஎல் நெட் பிராக்டீஸ் வேற.. சர்வதேச கிரிக்கெட் வேற”
லண்டன்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வலைப்பயிற்சியில் அடிப்பது வேறு, சர்வதேச கிரிக்கெட் வேறு என சுட்டிக் காட்டி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி. 2026 ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் வலைப் பயிற்சியில் சக அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை வைபவ் சூர்யவன்ஷி விளாசித் தள்ளியதாக கூறப்பட்டது. அதை சுட்டிக் காட்டி மொயீன் அலி அவரை வம்புக்கு இழுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 15 வயது 99 நாட்களில் அறிமுகமாகி, இந்தியாவின் மிக இள வயது சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி. 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி 237.30 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில், ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்களுடன் 776 ரன்கள் குவித்து மிரட்டியதால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. சஞ்சு சாம்சன் தொடர்ந்து சொதப்பியதால் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால், சர்வதேச அரங்கில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வைபவ் சூர்யவன்ஷி திணறினார். தான் விளையாடிய 3 போட்டிகளிலும் முறையே 14, 13, 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். குறிப்ப்பாக 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் ஆர்ச்சரின் ஷார்ட்-பால் மற்றும் பவுன்சர் வியூகங்களுக்கு இரையாகி விக்கெட்டுகளை பறிகொடுத்தார்.
இது குறித்து முன்னாள் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசியது வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலைப்பயிற்சியில் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை சூர்யவன்ஷி பிரித்து மேய்ந்ததாக சமூக வலைதளங்களில் பல கதைகளைக் கேட்டேன். ஆனால், வலைப்பயிற்சி வேறு, சர்வதேச கிரிக்கெட் வேறு என்பதை ஆர்ச்சரின் பந்துவீச்சு நிரூபித்துள்ளது. ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் சூர்யவன்ஷி அவுட்டானது மிகச்சிறப்பானது. அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சர்வதேச கிரிக்கெட் என்பது மிகவும் தீவிரமான களம்" என விமர்சித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷியின் இந்த சொதப்பலான ஆட்டமும், மொயீன் அலியின் இந்த காட்டமான கருத்தும் தற்போது இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications

