வைபவ் சூர்யவன்ஷிக்கு இனிமேதான் கச்சேரி.. இந்த தொடரில் ரன் குவிக்கலைனா.. காத்திருக்கும் விமர்சனம்
மும்பை: டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கூட தாண்டாத வைபவ் சூர்யவன்ஷி துலீப் டிராபி தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுவே அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, 2026 துலீப் டிராபி தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவினர் அவர் மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். ஆனால், டி20 கிரிக்கெட்டில் ரன்களைக் குவித்து வரும் வைபவ்விற்கு, டெஸ்ட் கிரிக்கெட் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

பீகார் அணிக்காக விளையாடும் வைபவ், கடந்த 2024 ஜனவரியில் தனது 12வது வயதில் மும்பைக்கு எதிராகக் களம் இறங்கி ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி சாதனை படைத்தார். ஆனால், ரஞ்சி போட்டிகளில் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 17.25 என்ற சராசரியோடு 207 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேகாலயாவுக்கு எதிராக அவர் எடுத்த 93 ரன்களே அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதுவரை முதல்தர கிரிக்கெட்டில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
இதற்கு நேர்மாறாக டி20 கிரிக்கெட்டில் வைபவ் மிரட்டியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 16 போட்டிகளில் 237.30 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். மேலும், இந்திய டி20 அணியிலும் அறிமுகமாகி விளையாடியுள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளிலும் அவர் 43.88 சராசரியுடன் 564 ரன்கள் குவித்துள்ளார்.
வெள்ளை பந்தில் அதிரடியாக விளையாடுவதற்கும், சிவப்பு பந்தில் ஐந்து நாட்கள் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. துலீப் டிராபியில் நாட்டின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் சீம் பந்துகளால் அவருக்குக் கடுமையான சவால் அளிப்பார்கள். எனவே, தனது அதிரடியைக் குறைத்துக்கொண்டு, விக்கெட்டைத் தக்கவைத்து நீண்ட நேரம் விளையாடும் பொறுமை வைபவ்விற்குத் தேவை. இத்தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறுவதற்கான அவரது வாய்ப்பு பிரகாசமாகும். இல்லையென்றால் அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுத்ததற்காகவே விமர்சனத்திற்கும் ஆளாவார்.


Click it and Unblock the Notifications
