வைபவ் சூர்யவன்ஷிக்கு மிகப் பெரிய கவுரவம்.. ஜனாதிபதி கையால் உயரிய விருது.. பிரதமருடன் சந்திப்பு
டெல்லி: பீகாரைச் சேர்ந்த 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றை வென்று தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். திறமைக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி. கிரிக்கெட் பேட்டைத் கையில் எடுத்தாலே ருத்ரதாண்டவம் ஆடும் இந்தச் சிறுவன், தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்ல, இப்போது மத்திய அரசின் உயரிய விருதாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' விருதை ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் பெற்றார் வைபவ். விருது விழா முடிந்த நிலையில், சக வெற்றியாளர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறவிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.

இந்த முக்கிய நிகழ்வுக்காக, கடந்த புதன்கிழமையே டெல்லி வந்து சேர்ந்துவிட்டார் வைபவ் சூர்யவன்ஷி. பீகாரின் சிறிய மைதானங்களில் தொடங்கிய இவரின் பயணம், இன்று ஜனாதிபதி மாளிகை வரை உயர்ந்திருப்பது சாதாரண விஷயமல்ல.
விருதின் சிறப்பு என்ன?
'பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்' என்ற விருது 5 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் வீரம், கலை, கலாசாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் நிகழ்த்தும் அசாத்திய சாதனைகளுக்காக சிறுவர்களுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய குடிமக்கள் விருது இதுவாகும்.
இந்த விருது கௌரவத்தைப் பெறுவதற்காக ஒரு சிறிய தியாகத்தையும் செய்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. டெல்லியில் நடக்கும் விழாவில் கலந்துகொள்வதால், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரின் எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் அவர் இல்லாதது பீகார் அணிக்குச் சிறிய பின்னடைவுதான்.
இரு நாட்கள் முன்பு தான் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 84 பந்துகளில் 190 ரன்களை விளாசித் தள்ளிய அந்த இன்னிங்ஸ், உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை ஆட்டமாக மாறியது. அதைத் தொடர்ந்து அவருக்கு விருதும் வழங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications