"பாகிஸ்தானை பொளக்க வர்றேன்”.. வைபவ் சூர்யவன்ஷி ஆவேச ஆட்டம்.. பாகிஸ்தானுக்கு இப்போதே வார்னிங்
பாட்னா: "இந்தியா ஏ" அணிக்குத் தேர்வான சில மணி நேரங்களிலேயே, ரஞ்சி டிராபி போட்டியில் தனது ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இளம் கிரிக்கெட் புயல் வைபவ் சூர்யவன்ஷி. ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு இப்போதே எச்சரிக்கை விடுத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
2025-26 ரஞ்சி டிராபி சீசனில், பீகார் அணியின் துணை கேப்டனாகக் களமிறங்கியுள்ள 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, செவ்வாய்க்கிழமை மேகாலயா அணிக்கு எதிரான போட்டியில் தனது அதிரடியால் மைதானத்தையே அதிர வைத்தார். வெறும் 67 பந்துகளைச் சந்தித்த அவர், 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 93 ரன்களைக் குவித்து, தனது முதல் முதல் தர சதத்தை 7 ரன்களில் தவறவிட்டார்.

இந்தியா ஏ அணியில் இடம்
செவ்வாய்க்கிழமைதான், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நடத்தும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான (முன்னர் எமர்ஜிங் அணிகள் தொடர் என இருந்தது) இந்தியா ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக, 19 வயதுக்குட்பட்டோருக்கான சேலஞ்சர் டிராபி அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
இந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைத் தொடர், நவம்பர் 14 முதல் 23 வரை தோஹாவில் நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே, பரம எதிரியான பாகிஸ்தான் ஏ அணியை நவம்பர் 16-ஆம் தேதி எதிர்கொள்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சீனியர் ஆசிய கோப்பையில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, இரு நாடுகளின் ஆண்கள் அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும் என்பதால், இப்போதே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
இந்தியா ஏ அணிக்குத் தேர்வான செய்தி வந்த சில மணி நேரங்களிலேயே, பாட்னாவில் உள்ள மொய்ன்-உல்-ஹக் மைதானத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுத்து, தேர்வாளர்களின் முடிவை நியாயப்படுத்தியுள்ளார் வைபவ். இருப்பினும், அவர் ஆட்டமிழந்த பிறகு பீகார் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.
வைபவின் மறக்க முடியாத 2025
இந்த 2025-ஆம் ஆண்டு, வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு கனவுப் பயணமாக அமைந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்து, ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்து, முதல் முறையாகத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு யூத் ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்த அவர், யூத் டெஸ்ட் போட்டியில் 78 பந்துகளில் சதம் விளாசி, 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.
அவரது இந்த அசுரத்தனமான ஃபார்ம் சற்றும் குறையாததால், கிரிக்கெட் வல்லுநர்களும், ஜாம்பவான்களும் அவரை உடனடியாக இந்திய சீனியர் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ரஞ்சி டிராபியில் வெளிப்படுத்திய இந்த 93 ரன் அதிரடி ஆட்டம் காரணமாக, அடுத்து நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications