மும்பை: இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல், 14 வயது வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் ஆசிய கோப்பை 2025 அணியில் இடம்பெற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக, முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற மூத்த வீரர்கள், அவரது அதிரடியான ஆட்டத்திறனைக் கருத்தில்கொண்டு, அவரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என வெளிப்படையாகவே பேசி உள்ளனர்.
ஆனாலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. அதற்கு காரணம் பிசிசிஐ அல்ல. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தான்.

2025 ஐபிஎல் தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே அரைசதம், பின்னர் அதிவேக சதமடித்து வரலாற்றுச் சாதனை படைத்த வைபவின் திறமை மீது யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அவரது அபார திறமைக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிமுறைகள் தடையாக நிற்கின்றன.
கிரிக்கெட் உலகில் இளம் வீரர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2020ஆம் ஆண்டு ஐசிசி ஒரு முக்கிய விதியைக் கொண்டுவந்தது. அதன்படி, ஆண்கள், பெண்கள் அல்லது 19 வயதுக்குட்பட்டோருக்கான எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாட ஒரு வீரருக்குக் குறைந்தபட்சம் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
இந்த விதி, ஐசிசி நடத்தும் தொடர்கள், இருதரப்பு தொடர்கள் என அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளுக்கும் பொருந்தும். இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டதன் முக்கிய நோக்கமே, இளம் வயதில் ஏற்படும் அதிகப்படியான உடல் மற்றும் மன அழுத்தங்களிலிருந்து வீரர்களைப் பாதுகாப்பதுதான்.
தற்போதைய நிலவரப்படி, மார்ச் 27, 2011 அன்று பிறந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயதுதான் ஆகிறது. அவர் தனது 15வது பிறந்தநாளை மார்ச் 27, 2026 அன்றுதான் கொண்டாடுவார். எனவே, ஐசிசியின் தற்போதைய விதிகளின்படி, அவர் ஆசிய கோப்பை 2025 தொடரில் இந்திய சீனியர் அணிக்காக விளையாடத் தகுதி பெறமாட்டார்.
சிலர், "ஐபிஎல் போன்ற கடினமான தொடர்களில் விளையாட முடிந்த வைபவால், சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாதா?" என்ற கேள்வியை எழுப்புகின்றனர். இங்கேதான் முக்கிய வேறுபாடு உள்ளது. ஐபிஎல் தொடர் பிசிசிஐயால் நடத்தப்படும் ஒரு உள்ளூர் டி20 லீக் ஆகும். அது ஐசிசியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வராது. இதனால், ஐபிஎல் தொடரில் வயது வரம்பு போன்ற ஐசிசி விதிகள் பொருந்தாது. இதனால்தான் 14 வயதிலேயே வைபவால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களமிறங்கி சாதனைகள் படைக்க முடிந்தது.
ஐசிசி விதியில் ஒரு சிறிய விதிவிலக்கு உள்ளது. மிக மிக அசாதாரணமான சூழ்நிலைகளில், ஒரு வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றை நிரூபிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நாட்டின் கிரிக்கெட் வாரியம் 15 வயதுக்குட்பட்ட வீரரை விளையாட அனுமதிக்கக் கோரி ஐசிசியிடம் சிறப்பு விண்ணப்பம் செய்யலாம்.
ஆனால், இது மிகவும் அரிதாகவே வழங்கப்படும் ஒன்றாகும். மேலும், ஆசிய கோப்பை போன்ற ஒரு பெரிய தொடருக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
ஆக, வைபவ் சூர்யவன்ஷியின் திறமை மீது எள்ளளவும் சந்தேகமில்லை என்றாலும், ஐசிசியின் வயது வரம்பு விதி, ஆசிய கோப்பைக்கான அவரது தேர்வுக்கு ஒரு தற்காலிகத் தடையாக அமைந்துள்ளது. அவரது ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள், அவர் சர்வதேச அரங்கில் களமிறங்க மார்ச் 2026 வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.