Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வைபவ் சூர்யவன்ஷி சரமாரி சிக்ஸ் மழை.. சுரேஷ் ரெய்னாவின் 21 வருட ரெக்கார்டு காலி.. இந்தியா U19 வெற்றி

நாட்டிங்காம்: இந்தியா அண்டர் 19 அணி மற்றும் இங்கிலாந்து அண்டர் 19 அணிகள் இடையிலான யூத் ஒருநாள் தொடரில், இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரண்டு வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்தத் தொடரில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் இருந்தன. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி சரமாரியாக சிக்ஸர் மழை பொழிந்தார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். வெறும் 20 பந்துகளில் அரை சதம் விளாசிய அவர், 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சுரேஷ் ரெய்னாவின் 21 ஆண்டு கால சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

Vaibhav Suryavanshi India U19 Youth ODI Cricket Record

அண்டர் 19 கிரிக்கெட் வரலாற்றிலேயே 80 ரன்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்தபோது அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்த வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி தற்போது முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 277.41 ஆக இருந்தது.

இதற்கு முன்பு, சுரேஷ் ரெய்னா ஸ்காட்லாந்து அண்டர் 19 அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு ஆடிய போட்டியில் 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 236.84 ஆக இருந்தது. அந்தச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.

மேலும், வைபவ் சூர்யவன்ஷி இந்திய வீரர்களிலேயே விரைவாக 50 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கோர்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி ஆறு பவுண்டரிகளையும், ஒன்பது சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இதன் மூலம், ஒரே அண்டர் 19 போட்டியில் 9 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதற்கு முன், மந்தீப் சிங் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு ஒரே போட்டியில் 8 சிக்ஸர்களை அடித்திருந்தார். அந்தச் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இதற்கு முன் 19 பந்துகளில் 48 ரன்களும், 39 பந்துகளில் 45 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அண்டர் 19 அணி, 34.3 ஓவர்களில் இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியைத் தவிர்த்து, விகான் மல்கோத்ரா சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு 6 விக்கெட் இழந்த நிலையில், ஏழாம் வரிசையில் இறங்கிய கனிஷ்க் சௌஹான் 42 பந்துகளில் 43 ரன்களும், ஆர்.எஸ். அம்பரீஷ் 30 பந்துகளில் 31 ரன்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

Story first published: Thursday, July 3, 2025, 7:43 [IST]
Other articles published on Jul 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+