ஜீவா படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு? இப்போ ஒருநாள் Salary எவ்வளவு? வருண் சக்கரவர்த்தி ஓபன் டாக்
மும்பை: ஐபிஎல் தொடர் மூலம் அடையாளம் காணப்பட்டு தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் தான் வருண் சக்கரவர்த்தி. கிரிக்கெட்டை தொழில் முறை விளையாட்டாக எடுத்துக் கொள்வதற்கு முன்பு வருண் சக்கரவர்த்தி பல்வேறு துறைகளில் பணிபுரிந்து இருந்திருக்கிறார்.
2021 டி20 உலக கோப்பையில் இடம் பெற்று அதில் சாதிக்க முடியாமல் போனதால் இந்திய அணியிலிருந்து 3 ஆண்டுகள் நீக்கப்பட்டார். பின் ஐபிஎல் தொடரில் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்து தற்போது நம்பர் ஒன் டி20 பவுலராக உருவெடுத்திருக்கிறார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வருண் சக்கரவர்த்தியின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது. இந்த சூழலில் வருசக்கரவர்த்தி அஸ்வின் நடத்தும் youtube சேனலில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் பேசிய வருண் சக்கரவர்த்தி, "கல்லூரி முடித்தவுடன் நான் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தேன்."
"அதில், என்னுடைய ஆரம்ப ஊதியம் மாதத்திற்கு 14 ஆயிரம் ரூபாய். அந்த நிறுவனத்தில் இருந்து நான் வெளியே வரும்போது என்னுடைய சம்பளம் 18,000 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு எனக்கு எது பிடிக்கும் என்று தெரியாமல் சுற்றித்திரிந்தேன். எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும் என்று நினைத்தேன். அதற்காக கித்தார் பயிற்சியை மேற்கொண்டேன்."
"அப்போதுதான் தெரிந்தது கலையை நேசிக்க வேண்டும் என்றால் அது நமக்குள் இருந்து வர வேண்டுமே, தவிர மற்றவர்களை கவர்வதற்காக அதை செய்யக்கூடாது என்று எனக்கு புரிந்தது. கித்தார் பயிற்சியை ஒரு மணி நேரத்திற்கு மேல் என்னால் செய்ய முடியவில்லை. இந்த காலகட்டத்தில் தேவாலயத்தில் இசைக் குழுவில் இணைந்திருந்தேன்."
"சரி, என்று மீண்டும் நாம் படித்த தொழிலையே செய்வோம் என சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தை தொடங்கினேன். அது ஒரு ஆண்டு வரை நன்றாக சென்றது. ஆனால் வரதா புயலால் தொழில் பாதிக்கப்பட்டு என்னுடைய அனைத்து முதலீடும் சென்று விட்டது. அப்போது எனக்கு 25 வயது இருந்தது. சரி, என நண்பர்களுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தபோது எனக்கு சினிமா மேல் ஆசை வந்தது."
"சில நண்பர்களும் திரைத்துறையில் இருந்தனர். எனவே படப்பிடிப்பு எவ்வாறு நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நான் ஒவ்வொரு தளத்திற்கும் சொல்வேன். அப்போதுதான் அங்கிருந்த துணை இயக்குனர் ஒருவரிடம் பேசும் போது ஜீவா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த கதை இருப்பதாகவும் தெரிந்தது."
"அப்போது துணை இயக்குனர் ஒருவர், உனக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று கேட்டார். நான் டென்னிஸ் பாலில் விளையாடி இருக்கின்றேன் என்று கூறினேன். இதை அடுத்து என்னை அந்த படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சேர்த்தார்கள். அப்போது ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளமாக கிடைத்தது. மொத்தம் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த 20 நாட்களுக்கு அந்த சம்பளம் போதுமானதாக இருந்தது."
வருண் சக்கரவர்த்தி பேசும் போது திடீர் என்று குறிக்கிட்ட அஸ்வின், "இப்போது ஒரு நாள் உனக்கு ஊதியமாக கிரிக்கெட்டில் எவ்வளவு கிடைக்கிறது" என்று கேட்டார். அதற்கு, "நான் அப்போது வாங்கிய சம்பளத்தை விட 42 மடங்கு அதிகமாக கிடைக்கின்றது. எனக்கு தற்போது ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக தருகிறார்கள்" என்று கூறினார். இதனை கேட்டதும் அஸ்வின் சிரித்தார்.


Click it and Unblock the Notifications