சீனியர் வீரர்களுக்கு வெங்சர்க்கார் விளாசல்; வெங்ஸுக்கு கங்குலி பதிலடி!
டெல்லி:
மூத்த வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும். இளம் வீரர்களைப் புறக்கணித்து விட்டு இவர்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு இயலாது என்று இந்திய கிரிக்கெட் அணித் தேர்வாளர் வெங்சர்க்கார் கூறியுள்ளார். ஆனால் அவரது பேச்சு பைத்தியக்காரத்தனமாக உள்ளதாக கங்குலி கோபத்துடன் கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் பேசிக் கொண்டிருக்கட்டும், நாம் விளையாட்டில் கவனம் செலுத்துவோம் என ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தியாவுக்கு வந்தவுடனேயே கூறினார். அவர் கூறியது போல சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. ஆனால் இந்தியாவோ சொங்கி, சுணங்கிக் கொண்டிருக்கிறது.முதல் போட்டியில் தோல்வி அடையாமல் மழை வந்து காப்பாற்றியது. 2வது போட்டியில் தோல்வி அடைந்தது. ஹைதராபாத்தில் நடந்த 3வது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.
இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர்களுக்குப் போய் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தார்களே என்ற கோபம் கிளம்ப ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் அணியின் மூத்த வீரர்களை வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார். ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், அணியில் உள்ள மூத்த வீரர்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அணியில் தொடர்ந்து நீடிக்க முடியும். இந்திய அணியில் சேர்வதற்கு பல இளம் வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என்று நம்பி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை. நன்கு விளையாடினால் மட்டுமே தொடர்ந்து அணியில் நீடிக்க முடியும். இல்லையெனில் வெளியேறி இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும்.
சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் உட்பட பல வீரர்கள் இந்திய ஏ அணியில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இவர்கள் அணியில் நுழைய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இது தொழில்முறை சம்பந்தப்பட்ட விவகாரம். அணியில் இடம் கிடைத்துவிட்டது என்பதற்காக அந்த இடத்துக்கு வேறு யாரும் வர முடியாது என்று நினைக்கக் கூடாது. எந்த ஒரு வீரரும் அணியில் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோரைத்தான் வெங்ஸ் இப்படி வறுத்துள்ளார் என்பது அனைவருக்கும் புரியும். டிராவிட்டுக்கும், வெங்ஸுக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்தது.
இந்த நிலையில் டிராவிடையும் சேர்த்து மொத்தமாக மூத்த வீரர்களை வாரியுள்ளார் வெங்ஸ்.
கங்குலி கண்டனம்:
இந்த நிலையில் வெங் சர்க்கார் பேச்சுக்கு கங்குலி கண்டனம் தெரிவித்துள்ளார். சச்சின் குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் தகுதி இல்லை. அப்படி கேள்வி எழுப்பினால் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்று அர்த்தம் என சீறியுள்ளார் கங்குலி.
வெங்சர்க்கார் சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தவறானது. அணியில் ஒருவர் தேர்ச்சி பெறுவதற்கு வயது பிரச்சனையே இல்லை. திறமை தான் அவர்களுக்கு முக்கியமானது. இதில் சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என்று வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று கூறியுள்ளார் கங்குலி.
நாளை 4வது மோதல்:
இந்த நிலையில் நாளை சண்டிகரில் 4வது ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது. இதில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பு அவர்களுக்கு பிரகாசமாகி விடும்.
நாளைய போட்டியில் சச்சின், டிராவிட், கங்குலி மூன்று பேரும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. நன்றாக விளையாடவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளதால், இவர்கள் மூவரும் நன்றாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications